தஞ்சையில் தனியார் பஸ்-டிப்பர் லாரி மோதல் மின்கம்பம் உடைந்தது; பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்




தஞ்சையில் தனியார் பஸ்சும், டிப்பர் லாரியும் மோதிய விபத்தில் மின்கம்பம் உடைந்தது. டிரைவர்களின் சாமர்த்தியத்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தனியார் பஸ்-டிப்பர் லாரி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து நேற்றுகாலை தனியார் பஸ் புறப்பட்டு தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனி மாணிக்கம் நகரை சேர்ந்த வினோத் (வயது33) என்பவர் ஓட்டி வந்தார். திருவாரூர் மாவட்டம் நேமம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (31) கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

அதேபோல் மன்னார்குடியில் இருந்து தஞ்சை நோக்கி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை கும்பகோணம் சீனிவாசநல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தங்கத்துரை (38) என்பவர் ஓட்டி வந்தார். தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே மன்னார்குடி சாலையும், பட்டுக்கோட்டை சாலையும் சந்திக்கும் சந்திப்பு பகுதியில் பஸ்சும், லாரியும் ஒரே நேரத்தில் வந்தன.

மோதல்

அப்படியே பஸ்சும், டிப்பர் லாரியும் ஒரே நேரத்தில் தஞ்சை சாலைக்கு வந்தபோது டிப்பர் லாரியின் முன்பக்கமும், பஸ்சின் முன்பக்கமும் பக்கவாட்டில் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் சத்தம் போட்டனர். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்துவதற்கு முயற்சி செய்தார். இருந்தாலும் பஸ்சானது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி இடதுபுறமும் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. பஸ் மோதியதால் மின்கம்பம் உடைந்து பாதி பஸ்சின் மீது விழுந்தது. மின்கம்பம் உடைந்ததால் உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

பஸ்சின் மீது மோதிய டிப்பர் லாரி வலது புறமாக சாலையில் உள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு எதிர்திசையில் இருந்த வாய்க்காலுக்குள் பாய்ந்தது. பஸ்சும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதும் 2 டிரைவர்களும் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையென்றால் பஸ் சாலையோரம் 10 அடி ஆழமுள்ள நீர் நிரம்பிய குட்டையில் கவிழ்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

காயம் இல்லை

பின்னர் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் பெரியஅளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை தாசில்தார் அருள்ராஜ் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டை- மன்னார்குடி பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாகும். இந்த இடத்தில் தற்போது சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த இடத்தில் அதிவேகமாக வந்து செல்கிறது. இதை தடுக்க வேண்டுமானால், இந்த இடத்தில் உள்ள சாலை தடுப்பை ரவுண்டானாவாக மாற்றி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments