புதுக்கோட்டையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 லட்சம் மோசடி பெண் உள்பட 4 பேர் கைது




புதுக்கோட்டையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிதி நிறுவனம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, அறந்தாங்கியில் தனியார் நிதி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த தனியார் நிதி நிறுவனத்தில் தனி நபர் கடன் வழங்க ரூ.1 லட்சத்திற்கு பதிவு கட்டணம் ரூ.1,000 எனவும், முதல் மாத தவணை தொகை ரூ.6 ஆயிரம் எனவும், மீத தவணை தொகை மாதம் குறைவாக செலுத்தினால் போதும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்நிறுவனத்தில் பொன்னமராவதி மற்றும் அறந்தாங்கி கிளையில் பதிவு கட்டணம் மற்றும் முதல் தவணை தொகை செலுத்திய பின்பு கடன் தொகை வழங்காமல் இருந்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் மோசடி தொடா்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு புகார் வந்தது. மேலும் இத்திட்டத்தில் கடன் பெற பணம் கொடுத்தவர்கள் அந்த நிறுவனத்தில் பணியற்றும் ஊழியர்களிடம் பணத்தை கேட்டு வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பொன்னமராவதி கிளை மேலாளரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த நாகராஜன் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுமார் 290 பேரிடம் ரூ.29 லட்சத்து 96 ஆயிரத்து 500 வரை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் இந்த நிதி நிறுவனத்தை நடத்திய உரிமையாளரான தூத்துக்குடியை சேர்ந்த நிர்மல்குமார் (வயது 40) மற்றும் அவருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த கோபி (40), திருச்சி நவல்பட்டை சேர்ந்த தேவிகா (42), திருச்சி பீமநகரை சேர்ந்த கென்னடி (34) ஆகிய 4 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த மோசடி தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments