‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து பொதுமக்களிடம் உயர் நிலைக்குழு கருத்துக்கள் கேட்டுள்ளது. 15-ந்தேதிக்குள் பதில் அளிக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலும் தனியாக நடைபெறுகிறது. இந்த தேர்தல்களை தனித்தனியாக நடத்துவதால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்படுகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தினால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் மிச்சமாகும். மக்களின் கால விரயமும் தவிர்க்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முழக்கத்தை முன் வைத்தார்.
இதற்கு சாத்தியம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும் 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தி விட வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் நிலைக்குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி குழுவின் தலைவர் என்.கே.சிங், நாடாளுமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகிய 7 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
உயர்நிலைக்குழு தகவல்
இந்த குழுக்கள் அளித்த பரிந்துரைகளின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு தற்போது உள்ள சட்ட நிர்வாக கட்டமைப்பில் பொருத்தமான மாற்றங்களை செய்வதற்கு பொதுமக்களின் பரிந்துரைகள் பெறப்பட உள்ளது. இதுதொடர்பாக ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' உயர்நிலைக்குழு செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. குறிப்பிட்ட விதிமுறைகளின்படி நிரந்தர அடிப்படையில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சட்டம் மற்றும் நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவது, அரசியலமைப்பு மற்றும் தொடர்புடைய தேர்தல் சட்டங்களில் தேவையான திருத்தங்களை அடையாளம் காண்பது, பொது வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போன்ற தளவாடங்களை தயார்ப்படுத்துவது அடங்கும்.
எழுத்துப்பூர்வ ஆலோசனைகள்
குழுவின் குறிப்பு விதிமுறைகள், நிபுணர் அமைப்புகளின் அறிக்கைகள் பற்றிய விவரங்களை http://onoe.gov.in/onoe-reports என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தற்போதுள்ள சட்ட நிர்வாக கட்டமைப்பில் பொருத்தமான மாற்றங்களை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
வருகிற 15-ந்தேதிக்குள் பெறப்படும் அனைத்து பரிந்துரைகளும் குழுவின் பரிசீலனைக்கு முன் வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளை https://onoe.gov.in அல்லது sc-hlc@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது புதுடெல்லி, இந்தியா கேட் சர்க்கிள், ஜோத்பூர் அதிகாரிகள் விடுதி (பிளாக் எண்-9), ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' உயர்நிலைக்குழு செயலாளர் என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒன்றாக தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.