சாலையை சீரமைக்காவிட்டால் ஆதார் அட்டையை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு




ஆவுடையார்கோவிலில் இருந்து குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர் வழியாக காரைக்குடி, அறந்தாங்கி போன்ற நகரங்களுக்கு செல்கின்ற சாலை கடந்த 11 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பள்ளமும், படுகுழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் காரைக்குடி, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்மணிகளை புதுவயல் நகரத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலையை சீரமைக்கக்கோரியும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த சாலையை பயன்படுத்தும் குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர், அண்ணாநகர் தனியனேந்தல், மீனாங்குடியிருப்பு, செபஸ்தியார்புரம், இந்திராநகர், முள்ளியான்வயல், சின்னவீரமங்களம், வானியன்குடியிருப்பு, காமராஜர்நகர், மகிலங்கோட்டை, சேதுராமன்வயல், செல்லப்பன்கோட்டை, பெரிய வீரமங்களம், செங்கீரை ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மேலும் வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி தங்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments