புதுக்கோட்டையில் தொடரும் சம்பவம்: கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சிப்பது ஏன்? பரபரப்பு தகவல்கள்


புதுக்கோட்டையில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சிப்பது ஏன்? என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கஞ்சா பறிமுதல் சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் சம்பவம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் கஞ்சாவை பண்டல், பண்டலாக கைப்பற்றி கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். சமீபத்தில் மணமேல்குடி, ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 180 கிலோ கஞ்சா பண்டல், பண்டலாக பறிமுதல் செய்தனர்.

மேலும் 8 பேரை கைது செய்தனர். இந்த 2 வழக்குகளும் மணமேல்குடி, ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு கடத்த முயற்சி

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தல் சம்பவம் தொடருவதற்கு பரபரப்பு தகவல்கள் போலீசார் விசாரணையில் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

புதுக்கோட்டையில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சிக்கின்றனர். இங்கிருந்து 2 கிலோ எடை கொண்ட ஒரு பண்டலை ரூ.1 லட்சம் வரை விற்பதாக கைதானவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கமிஷன் தொகை கிடைப்பதால் இலங்கைக்கு கடத்த முயற்சிப்பதாக கைதானவர்கள் கூறுகின்றனர். இத்தொழிலில் ஏற்கனவே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தான் இதனை அரங்கேற்றி வருகின்றனர்.

சரக்கு லாரிகள்

இலங்கைக்கு கடல் மார்க்கத்தில் இங்கிருந்து மீன்பிடிப்பது போன்று படகு மூலம் கொண்டு செல்வது வழக்கமாம். இலங்கையை சேர்ந்தவர்கள் கடலில் குறிப்பிட்ட நாட்டிக்கல்லில் வந்து அந்த பண்டல்களை வாங்கி செல்வார்களாம். இந்த கஞ்சா பண்டல்களை ஆந்திரா, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு லாரிகளில் நூதனமாக கடத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதேபோல ஒரு சில நேரங்களில் மீன் ஏற்றி வரும் லாரிகளிலும் நூதனமாக கடத்தி வருவதாக கைதானவர்கள் தெரிவித்ததன் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கிடைக்கும் ரகசிய தகவல் அடிப்படையில் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து கஞ்சா கடத்தலை தடுக்க அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments