பட்டுக்கோட்டை அருகே அதிசயம் விதைக்காத நிலத்தில் ஏக்கருக்கு 8 மூட்டை நெல் விளைச்சல்... தரிசாக விடப்பட்ட நிலத்தில் ஓராண்டுக்குப் பிறகு மூட்டைமூட்டையாக நெல் விளைந்தது எப்படி? வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு




தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் ஓராண்டுக்கு பிறகு மூட்டை மூட்டையாக நெல் விளைந்ததால், நிலத்தின் உரிமையாளர் மகிழ்ச்சியடைந்துள்ளார். தரிசு நிலத்தில் டன் கணக்கில் நெல் விளைந்தது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட ஆம்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இ.ஜெயராஜ். இவர் தனது நிலத்தில் தென்னை, நெல் போன்ற பயிர்களை நடவு செய்து விவசாயம் பார்த்து வருகிறார்.

இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இரண்டு ஏக்கர் பரப்பளவிலான தனது நிலத்தில் 50 ஆயிரம் செலவு செய்து டி.பி.எஸ்-5 ரக நெல் விதையை பயிரிட்டு, உரம் தெளித்து, நீர் பாய்ச்சி பராமரித்து இருக்கிறார்.

ஆனால், 130 நாளுக்கு பிறகு அதனை அறுவடை செய்த போது அதிலிருந்து 35 முதல் 40 மூட்டைகள் வரை மட்டுமே நெல் கிடைத்தது. இதனை நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்த போது 48,500 ரூபாய்க்கு மட்டுமே கிடைத்ததால், விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டது.

நெல்லை நடவு செய்து ஏற்பட்ட நஷ்டத்தால் அந்த நிலத்தில் அடுத்து நெல் பயிர் செய்யாமல் அருகில் இருந்த தென்னை தோப்பை பராமரித்து விவசாயப் பணிகளை செய்து வந்திருக்கிறார்.

விவசாயம் பார்க்காமல் இருந்த தரிசு நிலத்தில் நெல்மணிகள் தானாக முளைத்து அறுவடைக்குத் தயாராகி இருந்தன. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அருகில் இருந்த விவசாயிகள் விவசாயி ஜெயராஜிடம் கூறி உள்ளனர். அதில் ஒரு ஏக்கரில் அறுவடை செய்தபோது 16 மூட்டைகள் நெல் கிடைத்துள்ளது.

தரிசு நிலத்தில் மூட்டைமூட்டையாக விளைந்த நெல்

நிலத்தின் உரிமையாளர் ஜெயராஜ், நெல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், நெல் விவசாயம் செய்வதை நிறுத்தியிருந்ததாகக் கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், "நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். வெளிநாட்டில் பணி செய்து, சொந்த ஊருக்குத் திரும்பிய பின் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறேன். எங்களிடம் 12 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நெல் பயிரிட்டிருந்தேன்.

அறுவடையில் முதலீடு செய்த பணமே கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நெல் விவசாயம் செய்யக்கூடாது என அந்த நிலத்தில் எந்த பயிரையும் விதைக்காமல் தரிசாக விட்டு இருந்தேன்.

ஆனால், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பாக அருகில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் எனது நிலத்தில் நெற் பயிர் வளர்ந்து இருப்பதாக கூறினர். அங்கு சென்று பார்த்த போது நெல்மணிகள் நன்றாக வளர்ந்து இருந்தன. பின், மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு சென்று பார்த்த போது நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இதனை அப்படியே விட்டால் வீணாகிவிடும் என முதலில் ஒரு ஏக்கரில் மட்டும் அறுவடை பார்க்கலாமே எனப் பார்த்தேன். அதில் 16 நெல் மூட்டைகள் கிடைத்தது.

வயலில் நெல் பயிரிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் என எந்த வேலையும் செய்யாமல் இவ்வளவு மூட்டை நெல் கிடைத்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது", என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments