1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி பத்திரங்களின் நகலை ஆன்லைன் மூலம் பெறும் வசதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்




1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி பத்திரங்களின் நகலை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வணிகவரி, பதிவுத்துறை

மாநிலத்தின் வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக வணிகவரித்துறை விளங்குகிறது. பொதுமக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் செய்தல் போன்ற பணிகளை பதிவுத்துறை செய்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருச்சி, தூத்துக்குடி அலுவலகங்கள்

அதன்படி திருச்சி துறையூரில் ரூ.1 கோடியே 95 லட்சம் செலவிலும், புதுக்கோட்டையில் ரூ.85 லட்சத்து 53 ஆயிரம் செலவிலும் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட துணை கமிஷனர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி கமிஷனர், வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் ரூ.4 கோடியே 49 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.3 கோடியே 62 லட்சம் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.28.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.

10 கோடி ஆவணங்கள்

சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக பெறும் சேவை மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள பதிவறைகளில் ரூ.6.75 கோடி செலவில் பொருத்தப்பட்ட 2 இணையவழி புகைப்படக் கருவிகள் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி கமிஷனர் ஜெகந்நாதன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு

அதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.204.57 கோடி செலவில் 1,374 புதிய வகுப்பறை கட்டிடங்கள், ரூ.80.85 கோடி செலவில் 270 துறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் நூலகக் கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments