பட்டுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட இடம் தேர்வு ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு




பட்டுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.

ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் ஒருங்கிணைந்த கோர்ட்டு தற்போது இயங்கி வருகிறது. 3 மாடியில் கோர்ட்டு நடவடிக்கைகளும், ஒரு மாடியில் அலுவலகமும் இயங்கி வருகிறது.

1992-ம் ஆண்டு கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் தற்போது பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய 3 போலீஸ் நிலையங்கள், பட்டுக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த அனைத்து கிராமங்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து வழக்குகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் மகிளா கோர்ட்டு, கூடுதல் மாவட்ட கோர்ட்டுகள் வர இருப்பதால் புதிதாக ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

இந்த நிலையில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் பட்டுக்கோட்டைக்கு வந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள 11 ஏக்கர் நிலத்தையும், சாந்தாங்காடு ஊராட்சிக்கு சொந்தமான கோழிப் பண்ணை இருந்த இடத்தையும் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்களிடம் ஐகோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘பார்வையிட்ட 2 இடங்களின் முழு விவரங்கள் கிடைத்த உடன் எந்த இடத்தில் கோர்ட்டு கட்டலாம் என்பதை சென்னை ஐகோர்ட்டு கட்டிட கமிட்டி முடிவு செய்து ஐகோர்ட்டு பதிவாளருக்கு அனுப்பி வைத்து தமிழக அரசின் அனுமதி பெற்று புதிய கோர்ட்டு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

நீதிபதிகள்

ஆய்வின் போது தஞ்சை முதன்மை மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன், பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மணி, உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா, ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்லையா, பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் ஜெயஸ்ரீ, தாசில்தார் சுகுமார், பட்டுக்கோட்டை வக்கீல்கள் சங்கத் தலைவர் சற்குணம், செயலாளர் மணிகண்டன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments