அறந்தாங்கியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் அரசு பள்ளிகளில் ஆய்வு




அறந்தாங்கியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பொதுமக்களிடம் நேரில் குறைகளை கலெக்டர் மெர்சி ரம்யா கேட்டறிந்தார். மேலும் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அழியாநிலை ஊராட்சி, வாழக்குடியிருப்பு பகுதியில் உள்ள நூலகத்தை பார்வையிட்டார். மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் குறித்தும், வாழக்குடியிருப்பு அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் எடை மற்றும் மையத்தின் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.

இதேபோல அறந்தாங்கி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வித்திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வகுப்பறைகளில் கலெக்டர் மெர்சி ரம்யா அமர்ந்து பாடங்கள் நடத்தப்படுவதை கவனித்தார்.

கோரிக்கைகளை கேட்டறிந்தார்

மேலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவின் தரம் குறித்தும் மற்றும் பரிசோதனை கருவி மூலம் நீரின் தரத்தினை ஆராய்ந்தார். கூத்தங்குடியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையும், மேல்மங்கலம் பெருங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில், அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கலெக்டர் மெர்சிரம்யா பெற்றார். மேலும் அவர்களிடம் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீனிவாசன், கூட்டுறவு சார்பதிவாளர் அன்னலெட்சுமி உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments