தஞ்சாவூர்-விக்கிரவாண்டி 4 வழிச்சாலை பணியை 7 ஆண்டுகளாக முடிக்காதது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி




சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் 4 வழிச்சாலையை பணியை 7 ஆண்டுகளாக முடிக்காதது ஏன்? என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பா.ம.க. செய்தி தொடர்பாளரும், வக்கீலுமான கே.பாலு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மோசமான சாலை

சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் இருந்தது. இதனால், கடந்த 2017-ம் ஆண்டு இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, பணி தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக இந்த பணி முடிவடையவில்லை. இதனால் சுமார் 160 கி.மீ. தூரத்துக்கு இந்த மார்க்கமாக வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்க நேரிடுகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக உளுந்தூர்பேட்டை ஆண்டிமடம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியுள்ளது.

கட்டணத்துக்கு தடை

இதனால் வாகன ஓட்டிகளுக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது. நான்கு வழிச்சாலையாக முழுமையாக மாற்றப்படாத விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணமாக ரூ.100 வசூலிக்கின்றனர். எனவே இந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், விரைவாக முடிக்கவும் உத்தரவிட வேண்டும். அதுவரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விரைவாக பணி

அப்போது மனுதாரரான கே.பாலு ஆஜராகி, இந்த சாலை விரிவாக்கப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ''சாலை விரிவாக்கப் பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு இடர்பாடுகள் காரணமாக பணிகளை குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியாமல் காலதாமதம் ஆகியுள்ளது. எவ்வளவு விரைவாக இப்பணிகளை முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று கூறப்பட்டு இருந்தது.

அறிக்கை

இதையடுத்து நீதிபதிகள், இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை கடந்த 7 ஆண்டுகளாக முடிக்காதது ஏன்? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments