மின்மயமாக்கல் பணிகள் நிறைவு: மதுரை-போடி ரெயில் பாதையில் மின்சார என்ஜின் சோதனை ஓட்டம் தண்டவாளத்தை கவனமுடன் கடக்க அறிவுறுத்தல்




போடி-மதுரை ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அந்த பாதையில் மின்சார ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அகல ரெயில்பாதை

போடி-மதுரை இடையே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மீட்டர் கேஜ் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இதை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. கடந்த 2022-ம் ஆண்டு மதுரையில் இருந்து தேனி வரை பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.

போடி வரை பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயணிகள் ரெயில் போடி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் போடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் வாரம் 3 நாட்கள் போடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்று வரும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

சோதனை ஓட்டம்

இதற்கிடையே போடி-மதுரை ரெயில் பாதையை மின்மயமாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. மதுரையில் இருந்து போடி வரை மின்கம்பங்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு, மின்கம்பங்கள் நடும் பணிகள் நடந்தன. அந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து மின் இணைப்பு கம்பிகள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பணிகளும் தற்போது முடிவடைந்துவிட்டன. இதனால் போடி-மதுரை ரெயில் பாதை முழுவதும் மின்மயமாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

இந்தநிலையில் மின்மயமாக்கல் செய்யப்பட்ட போடி-மதுரை ரெயில் பாதையில் நேற்று மின்சார என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அந்த என்ஜின் ரெயிலுடன் 4 காலி பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருந்தன. மதுரையில் இருந்து 10 மணிக்கு புறப்பட்ட ரெயில் என்ஜின், மதியம் 1.45 போடிக்கு வந்து சேர்ந்தது. அதன்பிறகு போடியில் இருந்து மாலை 3.45 புறப்பட்ட ெரயில் என்ஜின், மதுரைக்கு இரவு சென்றடைந்தது.

மின் நிலையம்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “போடி-மதுரை ரெயில் பாதை முழுவதும் தற்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) நடந்த மின்சார ரெயில் சோதனை ஓட்டத்துக்கு, மதுரையில் மின் நிலையத்தில் இருந்து மின்பாதைக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு தேனி அருகே க.விலக்கு பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும். அதன்பிறகு அந்த மின் நிலையத்தில் இருந்து போடி-மதுரை மின்பாதைக்கு மின்சாரம் வழங்கப்பட்டு, மின்சார ரெயில் என்ஜின் இயக்கப்படும். எனவே வருங்காலங்களில் மின்சார என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படும். அப்போது ரெயில்கள் வேகமாக செல்லும். எனவே தண்டவாளத்தை கடக்கும் பொதுமக்கள், ரெயில் வருகிறதா? இல்லையா? என்று உறுதி செய்து கவனமுடன் கடக்க வேண்டும்” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments