எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது: பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு




பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்றும், வாகனங்களில் எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடத்துனர்களால் அளிக்கப்பட்டு வருவதாகவும், முறையாக வாகனங்களை பராமரிப்பது இல்லை என்பது தொடர்பாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இதனை தடுக்கும் நோக்கில் மாணவர்களை பாதுகாப்பாக பள்ளி வாகனங்களில் அழைத்து செல்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் சிறப்பு விதிகள்-2012-ல் பிரிவு 5 (6)-ன் படி மாணவிகளுக்கு இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

தரச்சான்று புதுப்பிக்க வேண்டும்

* பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் கனரக வாகன ஓட்டுனர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* பள்ளி வாகன டிரைவர் மற்றும் உதவியாளர் நியமனத்தின்போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான போலீசாரின் சான்று சமர்ப்பிக்க வேண்டும். டாக்டரிடம் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

* உதவியாளருக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். அந்த பயிற்சியின்போது போக்சோ சட்டத்தின் சாராம்சம் தெளிவாக விளக்கப்படவேண்டும்.

* வாகன டிரைவர்கள், உதவியாளர்களுக்கு தினமும் சுவாச சோதனை மேற்கொள்ளப்படவேண்டும். வாகனங்களில் ஜி.பி.எஸ். மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்படவேண்டும்.

* ஒவ்வொரு வாகனத்துக்கும் தரச்சான்று உரியகாலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கும் வாகனங்களை உட்படுத்த வேண்டும்.

அதிக மாணவர்களை ஏற்றக்கூடாது

* பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் பள்ளி வாகனம் என பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருப்பதோடு, பள்ளியின் தொலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

* பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் விதிகளின்படி அவசரகால வழி இருக்கவேண்டும். வேகக் கட்டுப்பாட்டு கருவி, முன் மற்றும் பின் சக்கரங்களில் இடையே பாதுகாப்பு தாள்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

* காலாவதியான வாகனங்களை பள்ளி வாகனங்களாக பயன்படுத்தக் கூடாது. அவசர காலங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வாகனங்களில் அவசரகால பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்.

* வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது. வாகனத்தில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும்போது, வாகனத்துக்கு அருகிலோ, பின்புறமோ குழந்தைகள் எவரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வாகனத்தை இயக்கவேண்டும்.

* பள்ளியை ஒட்டியுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்பது உள்ளிட்ட 32 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments