இனி ஆவணங்கள் தேவையில்லை: சென்னை, கோவை விமான நிலையங்களில் முக அடையாளம் மூலம் செல்லலாம் அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது




சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் இனி ஆவணங்கள் கொண்டு செல்ல தேவையில்லை. முக அடையாளம் மூலம் செல்லலாம். இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

உடனடி ஒப்புதல்

நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அவர்களது அடையாள ஆவணங்கள் மற்றும் பயணத்துக்கான டிக்கெட்டை காண்பித்து தான் உள்ளே செல்ல வேண்டியது உள்ளது. அதே போல் விமான பயணத்துக்கான போர்டிங் பாஸ் பெறுவதற்கும் ஆவணங்கள் காட்டவேண்டும். அதனால் அதிகளவில் நேர விரயம் ஏற்படுகிறது. அதோடு பயணிகள் அதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலையும் உள்ளது.

அதற்காக மத்திய அரசு ‘டிஜியாத்ரா’ என்ற ஒரு முக அடையாள நுழைவு திட்டத்தை 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி வாரணாசி, பெங்களூரு, டெல்லி ஆகிய விமான நிலையங்களில் கொண்டு வந்தது. இங்கு வரும் பயணிகள் விமானத்துறையின் டிஜியாத்ரா செயலியில் தங்களது செல்போன், ஆதார் எண் மற்றும் போட்டோவுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களது பயணத்திற்கான டிக்கெட் தகவல்களையும் சமர்ப்பித்தால் போதும். நாம் விமான நிலையத்துக்குள் நுழைந்தவுடன், செயலில் உள்ள கியூஆர் கோடினை அங்கு வைக்கப்பட்டு இருக்கும் எந்திரத்தில் காட்டவேண்டும் (மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருப்பது போன்று). உடனே, அங்குள்ள திரையில் நமது முகம் அடையாளம் காணப்பட்டு உடனடி ஒப்புதல் வழங்கப்பட்டு கதவு திறக்கப்படும். அதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. அதேபோல் விமான பயண போர்ட்டிங் பாஸ்-சையும் எளிதாக பெற்று கொள்ளளாம்.

சென்னை-கோவை

இந்த டிஜியாத்ரா திட்டம் அந்த விமான நிலையங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொல்கத்தா, புனே, விஜயவாடா, ஆமதாபாத், லக்னோ, மும்பை, கவுகாத்தி, ஜெய்ப்பூர், ஐதராபாத், கொச்சின், கோவா என மொத்தம் 14 விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் முக அடையாளம் மூலம் விமான நிலையத்துக்கு எளிதாக சென்று போர்டிங் பாஸ்சும் பெறுகின்றனர். டிஜியாத்ரா பயன்படுத்தும் பயணிகளுக்காக இந்த விமான நிலையங்களில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ்ந்த திட்டத்தை அடுத்த மாதம் முதல் இன்னும் சில விமான நிலையங்களுக்கு விரிவுப்படுத்த விமான நிலைய ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மேற்கு வங்கத்தில் சில்குரி, ராஞ்சி, புவனேஸ்வர், சண்டிகார், ராய்ப்பூர், விசாகப்பட்டினம், மங்களூரு, திருவனந்தபுரம் உள்பட 14 விமான நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளன. இது செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பயணிகளின் நேரம் பெருமளவில் மிச்சமாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments