எல்லை தாண்டி மீன்பிடித்தல், பயங்கரவாத ஊடுருவலை கண்காணிக்க நாகையில் ரூ.2½ கோடியில் அதிநவீன புதிய ரேடார் விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது




கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்தல், பயங்கரவாத ஊடுருவலை கண்காணிக்க ரூ.2½ கோடியில் அதிநவீன கேமராக்களுடன் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது.

பயங்கரவாதிகள் ஊருடுவலை கண்காணிக்க

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் கலங்கரை விளக்கங்கள் மற்றும் உயர் கோபுரங்களில் உள்ள ரேடார் கருவிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் சென்னை மெரினா, புதுச்சேரி, கோடியக்கரை, கீழக்கரை, மணப்பாடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கடற்கரையில் சக்தி வாய்ந்த ரேடார் கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு உயர் கோபுரத்தில் பொருத்தப்படும் ரேடார் கருவி தகவல் தொழில்நுட்பத்துக்காகவும், சென்சார் கேமராவாக புகைப்படம் எடுக்கும் பணியையும் சிறப்பாக செய்யும் தன்மை கொண்டது. இந்த ரேடார் கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருக்கும். ரேடார் மற்றும் சென்சாரின் தரவுகளை, கலங்கரை விளக்க அதிகாரிகள் உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்பி வைக்கும் பணிகளை செய்வார்கள்.

துல்லியமான தகவல் பரிமாற்றம்

இவ்வாறான ரேடாரின் செயல்பாடுகளை தமிழக கடலோரப் பகுதிகளில் இன்னும் துல்லியமாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமேஸ்வரம், தொண்டி, நாகை, பூம்புகார், பரங்கிப்பேட்டை, பழவேற்காடு உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் புதிதாக ரேடார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் அனைத்து ரேடார்களும் ஒன்றிணைக்கப்பட்டு துல்லியமான தகவல் பரிமாற்றத்தை செய்ய முடியும்.

ரேடார் கருவி பொருத்தும் பணி

நாகை மாவட்டத்தை பொருத்தவரை கோடியக்கரையில் மட்டுமே பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் அதிநவீன ரேடார் பொருத்தப்பட்டது. இருந்தும் கோடியக்கரையில் இருக்கும் அந்த ரேடார் மூலம் வடக்கு திசையில் உள்ள நாகை மாவட்டத்தை துல்லியமாக கணிக்க முடியவில்லை. இதையடுத்து நாகையில் உள்ள கலங்கரை விளக்க வளாகத்தில் அதிநவீன ரேடார் கருவி பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இது குறித்து நாகை கலங்கரை விளக்க நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கடற்கரை பகுதிகளில் அசம்பாவித அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் வகையில் ரேடார் கருவி பொருத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் கோடியக்கரை ரேடார் மூலம் 55 கிலோ மீட்டர் தூரம் வரைதான் கண்காணிக்க முடிந்தது. இதனால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு வந்தது. எனவே நாகையில் அதிநவீன ரேடார் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

அதிநவீன தொழில்நுட்பம்

இதற்காக ரூ.2.5 கோடி மதிப்பில் டென்மார்க் நாட்டில் இருந்து ரேடார் கருவி வரவழைக்கப்பட்டது. இந்த ரேடார் கருவியில் பொருத்தப்பட்டுள்ள 360 பார்வை திறன் கொண்ட 4 கேமராக்கள் மட்டும் ரூ.1 கோடி மதிப்புள்ளது. ரேடாரில் உள்ள கேமரா 55 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடல் எல்லை பரப்பில் நடக்கும் நிகழ்வுகளை தெளிவாக படம் பிடித்து உடனுக்குடன் பதிவு செய்யும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.

இயற்கை சீற்றங்களை கண்காணிப்பது, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் தகவல்களை பரிமாறி கொள்வது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

இதனால் நாகை கலங்கரையில் இருந்து அன்னிய நாட்டு கப்பல் வந்து சென்றால் தெளிவாக அடையாளம் காணமுடியும். அதேபோல் நமது நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பும் போது ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் உடனே தகவலை தெரிந்து கொண்டு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தலாம்.

80 சதவீத பணிகள் நிறைவு

மேலும் வானிலை மாற்றத்தையும் அறிய முடியும். இதில் பதிவாகும் தொகுப்புகளை கண்காணிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் 24 மணி நேரமும் கேமிராவில் பதிவாகும் பதிவுகளை பார்த்து சந்தேகம் ஏற்பட்டால் உடனே இந்திய கடல் படைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

இதற்காக 50 மீட்டர் உயரம் கொண்ட டவர் அமைக்கப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது டவரில் ரேடார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து வந்த என்ஜினீயர்கள் இதனை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரேடார் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. இந்த பணிகள் நடப்பு ஜூன் மாத இறுதிக்குள் முடிந்து அதிநவீன ரேடார் செயல்பட ஆரம்பிக்கும்.

இந்த நாகை ரேடார் மற்றும் கோடியக்கரை ரேடார் ஆகிய 2- ம் இணைந்து கடல் பரப்பில் துல்லியமான தகவல்களை படம் எடுத்து அனுப்பும் வல்லமை பெற்றதாக விளங்கும் என தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments