திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது முதலில் வந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. முதலில் வந்த சென்னை விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய முனையம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,112 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனிடையே பணிகள் முழுமை அடையாததால் விமான நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்தது. இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்காக விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தினர். இதைத்தொடர்ந்து, விமானங்கள் இயக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.

பயன்பாட்டுக்கு வந்தது

அதன்பேரில் புதிய முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு நடைபெற்றது. நேற்று காலை 6 மணி முதல் விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. காலை 6.40 மணி அளவில் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் முறையில் அதாவது தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் நயால் ஆகியோர் முதல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்றனர். பயணிகள் உற்சாகமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். இதேபோல் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் இருந்து காலை 7.40 மணி அளவில் பெங்களூருக்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது.

ஏற்கனவே இயங்கி வந்த திருச்சி விமான நிலையத்தின் முனையமானது நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் புதிய முனையத்திற்கு மாற்று வழியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மகிழ்ச்சி அளிக்கிறது

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கூறும்போது, இனிவரும் காலங்களில் விமானங்கள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்றார். பயணிகள் கூறும்போது, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இயக்கப்பட்ட முதல் விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களை விமான நிலைய ஊழியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றது பெருமிதமாக உள்ளது என்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி விமான நிலைய துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், உதவி துணை பொது மேலாளர் சந்தானகிருஷ்ணன், முனைய மேலாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments