வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலை தினசரி இயக்க வேண்டும் ரெயில் பயணிகள் கோரிக்கை




வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-

தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில்

அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகும், சென்னைக்கு ரெயில் வசதி இல்லாத திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி ரெயில் பாதையில் உள்ள ரெயில் பயணிகள் கோரிக்கையை ஏற்று ரெயில்வே நிர்வாகம் தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயிலை இயக்க திட்டமிட்டது.

இந்த ரெயிலை 8.4.2023-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கொடி அசைத்து ெதாடங்கி வைத்தார்.

3 நாட்கள் இயக்கப்படுகிறது

இந்த ரெயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரெயில் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டைக்கு அதிகாலை 3.25 மணிக்கு வந்தடையும். பின்னர் அங்கிருந்து அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு காலை 10.50 மணிக்கு சென்றடையும். மீண்டும் இந்த ரெயில் இதே தடத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு இரவு 10.50 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து தாம்பரத்துக்கு காலை 6.05 மணிக்கு சென்றடையும்.

தினசரி இயக்க வேண்டும்

இந்த ரெயில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி தடத்தில் உள்ள ரெயில் பயணிகளுக்கும் மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள ரெயில் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.எப்போதுமே இந்த ரெயில் பயணிகளால் நிரம்பி வழிகிறது. முக்கியமாக சென்னைக்கு ரெயில் வசதி இல்லாத திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி தடத்தில் உள்ள ரெயில் பயணிகளுக்கு மிகவும் பயன் தரும் வகையில் உள்ளது.

வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், ஆன்மிக புனித யாத்திரை செல்வோர், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் ஆகியோர் பிரதமர், ரெயில்வே மந்திரி, ரெயில்வே போர்டு தலைவர், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர், திருச்சி மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். மீண்டும் மத்திய அரசில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என ரெயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments