குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 பேர் உயிரிழப்பு: 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவுவளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கின்றனர்.

7 மாடி கட்டிடம்
குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

7 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.

திடீரென தீப்பிடித்தது
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தவர்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது. இதில் ஏற்பட்ட கரும்புகை அந்த கட்டிடம் முழுவதும் சூழ்ந்து கொண்டது. இந்த கொடூர சம்பவத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பல தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிர் தப்புவதற்காக மாடிகளில் இருந்து கீழே குதித்தபோது படுகாயமடைந்து உயிர்விட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கே மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தவர்களை மீட்ட அவர்கள், காயமடைந்து உயிருக்குப்போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

50-க்கும் மேற்பட்டோர் காயம்
இந்த துயர சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.

எனவே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்குள்ள இந்திய தூதர் ஆதர்ஷ் சுவைகா தீ விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

மேலும் பலியான இந்தியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் இறங்கிய இந்திய தூதரகம், உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியது.

45 இந்தியர்கள்
இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை குவைத் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. மரபணு பரிசோதனை மூலம் இதை உறுதி செய்துள்ள அதிகாரிகள், அவற்றை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர்.

24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்
இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் மரணம் அடைந்த கேரளாவை சேர்ந்த 24 பேரில் 14 பேர் யாரென்று அடையாளம் தெரியவந்துள்ளது. 
அதுபற்றிய விவரம் வருமாறு:-
கேரளாவை சேர்ந்தவர்கள்
கொல்லம் சூரநாட்டை சேர்ந்த ஷெமீர் (வயது 30), கோட்டயம் பாம்பாடியை சேர்ந்த சாபு (30), திருக்கரிப்பூர் பொன்லேரி (55), பந்தளம் ஆகாஷ் (32), பத்தனம் திட்டா வாழமுட்டம் பி.வி.முரளீதரன் (54), புனலூர் சாஜன் ஜார்ஜ் (28), கொல்லம் சாபு (48), கோன்னி சஜு வர்க்கீஸ் (56), காசர்கோடு ரஞ்சித் (34), திருவல்லா தாமஸ் உம்மன் (37), சங்கனாச்சேரி ஸ்ரீஹரி பிரதீப் (27), மலப்புரம் நூகு (40), எம்.பி.பாகுலேயன் (36), கண்ணூர் விஸ்வாஸ் (34) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்தவர்களை படத்தில் காணலாம்.

தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உடல்களை கொண்டு வர மந்திரி ஒருவரையும் அனுப்பியுள்ளார்.

தமிழர்கள் உயிரிழந்த சோகம்
இதேபோல் இந்த தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை ராயபுரம் கார்ப்பரேஷன் காலனி முதல் லேனை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 48).

குவைத்தில் லாரி டிரைவர் வேலைக்கு சென்றார். தீ விபத்தில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

கோவில்பட்டியை சேர்ந்தவர்
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (41) என்பவரும் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா (11) என்ற மகளும், கதிர் நிலவன் (7) என்ற மகனும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் வானரமுட்டியில் நடந்த கோவில் விழாவில் பங்கேற்பதற்காக மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்து சென்றார். இந்த நிலையில் உயிரிழந்ததை அறிந்த மாரியப்பனின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சைப் பிழியும் வகையில் இருந்தது.

விமான டிக்கெட் கிடைக்காததால்...
இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு (65) என்பவரும் பலியாகி உள்ளார். இவர் குடும்பத்துடன் ராமநாதபுரம் பட்டினம்காத்தான் வடக்கு தெரு பகுதியில் குடியிருந்து வந்தார்.

26 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்த ராமுவின் விசா காலம் கடந்த 11-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஊர் திரும்ப டிக்கெட் கிடைக்காததால் அங்கு இருந்துள்ளார்.

அப்போது சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர், விழா ஒன்றில் கலந்து கொள்ள கேரளாவுக்கு வந்துவிட்டாராம்.

இதனால் உரிமையாளர் திரும்பி வந்ததும் பணப்பலன்களை வாங்கிவிட்டு சில நாட்களில் ராமு சொந்த ஊருக்கு வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் ராமு வசித்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூரை சேர்ந்தவர்கள்
இதேபோல் தீ விபத்தில் சிக்கி கடலூர் மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (40) என்பவரும் இறந்திருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் பணியாற்றி வந்த சின்னதுரை, வேலையை விட்டு விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் அவரை வேலைக்கு அழைத்ததால் குவைத் சென்றுள்ளார். இன்னும் 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்தவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளார்.

இரும்பு கம்பெனி ஊழியர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப் (36) என்பவரும் தீ விபத்தில் உயிரை இழந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

முகமது ஷெரீப் கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள என்.பி.டி.சி. என்ற ஸ்டீல் கம்பெனியில் போர்மேனாக பணியாற்றி வந்தார். கணவனை இழந்ததால் அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

திருச்சி லாரி டிரைவர்
இந்த விபத்தில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த ராஜூ (53) என்பவரும் இறந்திருப்பதாக தகவல் தெரியவந்தது. இவர் குவைத்தில் உள்ள என்.பி.டி.சி. நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கன்டெய்னர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

என்.பி.டி.சி. நிர்வாகம் ராஜூ இறந்துவிட்டதாக போன் மூலம் அவருடைய மகன் குணசீலனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய என்பவரும் தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

பலியானவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்-அமைச்சர் இரங்கல்
இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
குவைத் தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜூ, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமதுஷெரிப் ஆகிய 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன்.

தனி விமானம் மூலம்...
உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக கொண்டு வருவதற்கு குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

ரூ.5 லட்சம் நிதியுதவி
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்றுவரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உதவி தொலைபேசி எண்கள்
மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்துகொள்வதற்கு அயலகத் தமிழர்நலத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத்தொடர்பு கொள்ளுமாறுகேட்டுக் கொள்கிறேன்.இந்தியாவிற்குள் தொடர்புகொள்வதற்கு உரிய தொலைபேசிஎண். +91 1800 309 3793, அதேபோன்று குவைத் நாட்டில் தொடர்புகொள்வதற்கு உரிய தொலைபேசிஎண் +918069009900, +91 8069009901. இந்த 2 எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர்நலத்துறையைத் தொடர்புகொண்டு தேவைப்படும் தகவல்களைப்பெற்றிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரி விரைந்தார்
விபத்து குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்தார். மேலும் தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவித்தார்.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்காகவும் வெளியுறவு இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங்கை குவைத்துக்கு அனுப்பி வைத்தார்.

இவர் குவைத் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர்.

மேலும் பலியானவர்களில் 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு உடல் மட்டும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதையும் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விமானப்படை விமானம் தயார்
உயிரிழந்த தமிழர்கள் உள்பட அனைத்து இந்தியர்களின் உடல்களையும் தாயகம் கொண்டு வரும் பணிகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. அங்கு சென்றுள்ள மத்திய மந்திரி கீர்த்திவர்தன் சிங்கும் இந்த பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படை விமானம் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா உத்தரவிட்டு உள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறார்.

தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர், நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை முடியும் வரை அவர்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகையே உலுக்கியுள்ள இந்த தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தரைத்தளத்தில் கியாஸ் கசிந்து விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பலியான தமிழர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள் உடலை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று சந்தித்து விளக்கி கூறினார்.

பின்னர், அமைச்சர் கூறுகையில், ‘அயலக தமிழர் நலத்துறை சார்பில் தூதரகத்தின் உதவியோடு தீக்காயத்தோடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அங்கே இருக்கும் தமிழ் சங்கங்களுடன் இணைந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பலியான தமிழர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments