கோபாலப்பட்டிணத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி ஊராக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா அவர்களை நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T.ராமச்சந்திரன் மனு அளித்து வலியுறுத்தல்!



நாட்டாணி புரசக்குடி ஊராட்சியை இரண்டாக பிரித்து கோபாலப்பட்டிணம் ஊராட்சி என்றும், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி என்றும், இரண்டு ஊராட்சிகளாக செயல்பட அரசு அனுமதித்து அறிவிக்க கோரி  ஊராக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா I.A.S.  நேரில் சந்தித்து நேற்று 14/06/2024 அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

கோபாலப்பட்டிணம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகையுடன் 12 குக்கிராமங்களையும், 8 ஆயிரம் வாக்காளர்கள் மற்றும் 12 வார்டுகளை கொண்ட ஊராட்சி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் வாக்காளர்களையும், 6 வார்டுகளையும் கொண்ட பெரிய கிராமம் ஆகும். நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு வரக்கூடிய நிதியில் 12 கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. கோபாலப்பட்டிணம் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமமாக இருப்பதால் போதிய நிதி கிடைப்பதில்லை என்பதால் கோபாலப்பட்டிணத்தை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் இருந்து பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது குறித்து கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.   

முதல்வருக்கு மனு

அதனையடுத்து கோபாலபட்டிணத்தை தனி ஊராட்சியாக அரசு அனுமதித்து ஆணை வழங்கிட தமிழக முதல்வருக்கு கடந்த 07.02.2023 அன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் கடிதம் எழுதி இருந்தார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்கு மனு

இதுகுறித்து கடந்த 31.03.2023 அன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களை நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார். அதில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை இரண்டாக பிாித்து அதாவது கோபாலப்பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு கோபாலப்பட்டிணம் ஊராட்சி எனவும் மீதமுள்ள அனைத்து கிராமங்களையும் ஏற்கனவே உள்ளபடி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி என்றும் பிரிக்க கோரி வலியுறுத்தினார். இதனையடுத்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இந்த கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தருவதாக தெரிவித்திருந்தார்.

2023 சட்டசபையில் குரல்

இந்நிலையில் 13.04.2023 சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கோபாலப்பட்டிணம் என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு கோபாலப்பட்டிணம் ஊராட்சி என்றும், மீதமுள்ள கிராமங்களை சேர்த்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி என்றும் இரண்டு ஊராட்சிகளாக செயல்பட அரசு அனுமதித்து ஆணை வழங்கிட வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை குரல் எழுப்பினார்.

2024 சட்டசபையில் குரல்

தமிழக சட்டசபையில் கடந்த 22.02.2024 அன்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் தி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி தொகுதி), 'எனது அறந்தாங்கி தொகுதியில் 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி நாட்டாணிபுரசக்குடி ஆகும். அதை இரண்டாக பிரித்து கோபாலப்பட்டிணம் என்ற புதிய ஊராட்சியை உருவாக்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஊரக வளர்ச்சி துணை இயக்குநர் 

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை இரண்டாக பிரித்து கோபாலப்பட்டிணம் ஊராட்சி என்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி என்றும், ரெத்தினகோட்டை ஊராட்சியை பிரித்து கூத்தாடிவயல்  ஊராட்சி என்றும், ரெத்தினகோட்டை ஊராட்சி என்றும் இரண்டு ஊராட்சிகளாக செயல்பட அரசு அனுமதித்து அறிவிக்க கோரி நேற்று 14/06/2024 ஊராக வளர்ச்சித் துறை இயக்குநர் திரு.பொன்னையா இ.ஆ.ப. அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments