தரவரிசைப் பட்டியல் வெளியீடு 200 மதிப்ெபண் எடுத்து 65 பேர் சாதனை: என்ஜினீயரிங் கலந்தாய்வு 22-ந்தேதி தொடக்கம் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது




என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 65 மாணவர்கள் 200 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். என்ஜினீயரிங் கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி செப்டம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

என்ஜினீயரிங் படிப்பு

2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட 24 ஆயிரத்து 787 பேர் அதிகம்.

விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டு, 9 ஆயிரத்து 777 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 959 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ததற்காகவும், 391 பேர் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களாகவும், 1,219 பேர் பிற மாநிலத்தவர்களாகவும், 2 ஆயிரத்து 208 பேர் முறையான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யாதவர்களாகவும் இருந்தனர்.

தரவரிசைப் பட்டியல்

அதன்படி, தகுதியுள்ள 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேருக்கு தரவரிசைப் பட்டியல் சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உடன் இருந்தார்.

அரியலூர்

தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 6 மாணவிகளும், 4 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

1. என்.தொசிதா லட்சுமி (செங்கல்பட்டு), 2. கே.நிலஞ்ஜனா (திருநெல்வேலி), 3. கோகுல் (நாமக்கல்), 4. கே.அஸ்விதா (அரியலூர்), 5. எம்.சபிக் ரகுமான் (அரியலூர்), 6. எம்.சிபன் ஆஷி (கோவை), 7. எஸ்.பாவ்யாஸ்ரீ (விழுப்புரம்), 8. ஆர்.நவீனா (அரியலூர்), 9. ஜி.எம்.அட்சயா (தஞ்சாவூர்), 10. எம்.கார்த்திக் விஜய் (கிருஷ்ணகிரி).

இதில் அரியலூரை சேர்ந்த மூன்று மாணவ-மாணவிகளும் அரியலூர் கோகிலாம்பாள் சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

அதேபோல், அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 32 ஆயிரத்து 223 பேருக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில், 7 மாணவர்களும், 3 மாணவிகளும் இடம் பிடித்திருக்கின்றனர். அவர்களின் விவரம் வருமாறு:-

1. எஸ்.ராவணி (சேலம்), 2. கிருஷ்ணா அனூப் (கோவை), 3. எம்.சரவணன் (வேலூர்), 4. எஸ்.மதுஸ்ரீ (ஈரோடு), 5. டி.சுஜித் (திருப்பூர்), 6. கே.கவின் (ஈரோடு), 7. பி.மாரீஸ்வரன் (விருதுநகர்), 8. டி.சுகந்த் (திருப்பூர்), 9. வி.ஹரிராஜ் (ராணிப்பேட்டை), 10. எஸ்.எம்.ஹரிஷ் (தஞ்சாவூர்).

200 கட்-ஆப் மதிப்பெண்

தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்ணை 65 பேர் எடுத்திருந்தனர். இவர்களில் 58 பேர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழும், 7 பேர் பிற வாரியங்களின் பாடத்திட்டத்தின் கீழும் படித்தவர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு 102 பேர் 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

22-ந்தேதி கலந்தாய்வு தொடக்கம்

வருகிற 22-ந்தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு 22, 23-ந்தேதிகளிலும், பொதுப் பிரிவினரில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.அதன் பின்னர், பொது கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும், எஸ்.சி.ஏ. காலியிடம், எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு 10, 11-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது.

எவ்வளவு காலி இடங்கள்

நடப்பு கல்வியாண்டில் எவ்வளவு கல்லூரிகள் இருக்கின்றன?, அந்த கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? என்பது போன்ற முழு விவரங்கள் (சீட் மேட்ரிக்ஸ்) வருகிற 15-ந்தேதிக்குள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வீரராகவராவ் தெரிவித்தார். மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யும் பட்டியலில் அதிகமான கல்லூரிகளை தேர்வு செய்ய அவர் வேண்டுகோளும் விடுத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments