பேரானூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு




பேரானூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பட்டா வழங்கியதை தடை செய்ய வேண்டும்

ஆவுடையார்கோவில் அருகே பேரானூர் கிராமத்தில் உள்ள மாறமங்கலம் ஏரியின் உள்வாயிலை ஆக்கிரமித்து 200 ஆண்டுகள் பழமையான பல்லுயிர் இயற்கை காட்டை அழித்து சட்டத்துக்கு புறம்பாக தனியார் சோலார் அமைப்பதை தடுக்கவும், சட்டத்துக்கு புறம்பாக காட்டுப்பகுதிக்கு முறைகேடாக பட்டா வழங்கியதை தடை செய்ய வேண்டும் என்று பேரானூர், இறையாமங்கலம், மாறமங்கலம், பெருங்குளம், பொன்பேத்தி உள்ளிட்ட கிராமங்களின் கால்நடைகளின் மேய்ச்சல் காடாக இருந்த இடத்தை மீட்க கோரி தமிழக முதல்-அமைச்சருக்கும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும், அறந்தாங்கி கோட்டாட்சியருக்கும், ஆவுடையார்கோவில் தாசில்தாருக்கும், வனத்துறையினருக்கும், சார்பதிவாளருக்கும், மின்சார வாரிய துறையினருக்கும் முறைப்படி பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.

சாலை மறியல்

ஆனால் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், பேரானூர் கிராமத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் வராததை கண்டித்தும் நேற்று பேரானூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திருப்புனவாசல்-கானூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருப்புனவாசல்-கானூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments