புதுக்கோட்டை அருகே கருக்கலைப்பின்போது நர்சு சாவு: தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு ஸ்கேன் மையத்திற்கு ‘சீல்’




புதுக்கோட்டை அருகே கருக்கலைப்பின்போது நர்சு இறந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஸ்கேன் மையத்திற்கு ‘சீல்' வைத்தனர்.

கருக்கலைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மேலமஞ்சுவிடுதியை சேர்ந்தவர் பரிமளேஸ்வரன். இவரது மனைவி கலைமணி (வயது 31). இவர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கலைமணி மீண்டும் கர்ப்பமடைந்தார். அவர் 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், சம்பவத்தன்று பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கலைமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக கலைமணி இறந்ததாகவும், எனவே மருத்துவமனை மீதும், சிகிச்சை அளித்த டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் கலைமணியின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீல் வைப்பு

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை இணை இயக்குனர் ஸ்ரீபிரியா தேன்மொழி, குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கோமதி தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று சுமார் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். அதனைதொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்கேன் பரிசோதனை மையத்திற்கு ‘சீல்' வைத்தனர்.

இதுகுறித்து மருத்துவத்துறை இணை இயக்குனர் ஸ்ரீபிரியா தேன்மொழி நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவமனையில் முறையாக பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு கருக்கலைப்புக்கும், பெண்ணின் இறப்புக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

உரிமம் ரத்து

தற்போது இந்த மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட 2 உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்கேன் மைய அறை பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து மேல் நடவடிக்கைக்காக கலெக்டர் மற்றும் மருத்துவத்துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரிடம் மனு

இதற்கிடையே கலைமணியின் தந்தை காளிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெனினிஸ்டு மக்கள் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் விடுதலை குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருணாவை நேற்று சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும், டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைமணியின் உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments