வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் 20-ந்தேதி தொடக்கம் இறுதிப்பட்டியல் ஜனவரி 6-ந்தேதி வெளியீடு




வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வருகிற 20-ந்தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 6-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல் திருத்தம்

1.1.2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக (18 வயது பூர்த்தியாகும் நாள்) கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை மேற்கொள்ளும்படி இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அட்டவணையையும் அறிவித்துள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் 20-ந்தேதி தொடங்கி வரும் அக்டோபர் 18-ந் தேதி முடியும். அந்தப் பணியின்போது, வாக்குச் சாவடி அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணி; வாக்குச் சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணி:

வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல்; வாக்காளர் பட்டியலிலுள்ள மங்கலான, மோசமான, தரமற்ற படங்களை மாற்றி படத்தின் தரத்தை மேம்படுத்துதல்; வாக்குச் சாவடிகளின் பகுதி மற்றும் பகுதி எல்லைகளை உத்தேசமாக மறுசீரமைத்து, வாக்குச் சாவடிப்பட்டியல் குறித்து ஒப்புதல் பெறுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியல்

இந்தப் பணிகள் முடிந்ததும், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்படும். அதில் திருத்தங்கள், ஆட்சேபனைகளை தெரிவிக்க 29.10.2024 முதல் 28.11.2024 வரை வாய்ப்பளிக்கப்படும். அப்போது வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் மீது 24.12.2024 தேதிக்குள் தீர்வு காணப்படும். அனைத்து திருத்தங்களையும் மேற்கொண்ட பிறகு 6.1.2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் முடிந்த பிறகு, அனுமதிக்கப்பட்ட 29.10.2024 முதல் 28.11.2024 வரையுள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கவோ, திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ, ஆதார் நம்பரை இணைக்கவோ விரும்பும் வாக்காளர்கள், அதற்கான 6, 6பி, 7, 8 ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

யார் யாரிடம்...?

அந்த விண்ணப்பங்களை, அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி அலுவலரிடமோ அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம் நடக்கும் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் இருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அளிக்கலாம்.

அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

முகவரி, வயது சான்றுகள்

முகவரிச் சான்றாக, குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் நகலை விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். அதன்படி, தண்ணீர் அல்லது மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 ஆண்டுக்கானது); ஆதார் அட்டை தேசியமயமாக்கப்பட்ட அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம்; கடவுச் சீட்டு;

விவசாயி புத்தகம் உள்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள்; பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்) ; பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (சொந்த வீடு என்றால்) ஆகியவற்றில் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்.

வயதுச் சான்றாக சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் நகலை அளிக்கலாம். அதன்படி, உள்ளாட்சி அமைப்பு அல்லது நகராட்சி அதிகாரி அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய பிறப்பு சான்றிதழ்; ஆதார் அட்டை; பான் அட்டை; ஓட்டுனர் உரிமம்;

சி.பி.எஸ்.இ. அல்லது ஐ.சி.எஸ்.இ. மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் (அதில் பிறந்த தேதி இருந்தால்) ; இந்திய கடவுச் சீட்டு ஆகியவற்றின் ஏதாவது ஒன்றின் நகலை அளிக்கலாம். 25 வயதுக்குக்கு கீழுள்ள மனுதாரர்கள், வயதுச்சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஆன்லைன் விண்ணப்பம்

https://voters.eci.gov.in/, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி என்ற கைபேசி செயலி (வோட்டர் ஹெல்ப் லைன்) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

1.1.2025, 1.4.2025, 1.7.2025 மற்றும் 1.10.2025 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். படிவத்தில் உள்ள உறுதிமொழியை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வாக்காளரின் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக விண்ணப்பதாரர்கள் 200 டிபிஐ ரெசலூசன்கொண்ட புகைப்படங்களை அளிக்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் 6ஏ படிவத்தை நேரில் வந்து அளிக்க வேண்டும் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். விண்ணப்பத்தை நேரில் அளிக்கும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் விசா உள்ளிட்ட கடவுச்சீட்டின் பக்கங்களின் நகலை அளிக்க வேண்டும். மூல கடவுசீட்டை அதிகாரி சரிபார்த்துவிட்டு அதை உடனே திரும்பக் கொடுத்துவிடுவார். விண்ணப்பத்தை தபாலில் அனுப்பும்போது, கடவுசீட்டின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும்.

எதற்கு எந்த விண்ணப்பம்?

ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கு 6பி படிவத்தை விண்ணப்பிக்கலாம். தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயர்ந்தாலோ அல்லது வாக்காளரின் விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயர்தல், திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம் 8-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பப்படிவம் 6; வெளிநாடு வாழ் வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பம் 6 ஏ; வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்காக ஆதார் எண் உண்மையென சான்றுரைக்க படிவம் 6பி; ஒருவரின் பெயரை சேர்க்க ஆட்சேபணை செய்யவும், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்கக் கோருவதற்கான விண்ணப்பம் 7;

குடியிருப்பை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிகுள்ளேயே மாற்றினாலோ அல்லது நடப்பு வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கான அல்லது மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான அல்லது மாற்றுத் திறனாளிகளை குறிப்பதற்கான விண்ணப்பப் படிவம் 8-ஐ விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments