தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி; 2 பேர்கதி என்ன? பூண்டி மாதா பேராலய தேர்பவனியில் பங்கேற்க வந்த போது சோகம்





தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மாயமானார்கள். அவா்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பூண்டி மாதா பேராலயத்துக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பூண்டி மாதா பேராலயம்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திருவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு பூண்டி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடந்தது.

விழாவில் கலந்து கொள்ள சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கலைவேந்தன்(வயது19), ஜியாவுதீன் மகன் தமிழரசன் என்ற கிஷோர்(19), ஜான்சன் மகன்கள் பிராங்கிளின்(23), ஆண்டோ(18), வெங்கடேஸ்வரன் மகன் மனோகரன்(18) மற்றும் 7 பெண்கள் உள்பட 18 போ் ஒரு வேனில் சென்னையில் இருந்து புறப்பட்டனர்.

சென்ைனயில் இருந்து வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு சென்ற இவர்கள் மாதா தேர்பவனியை பார்த்துவிட்டு அங்கிருந்து நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்துக்கு வந்தனர்.

ஆற்றில் மூழ்கினர்

பேராலயம் அருகே மீன்களை வாங்கிய அவர்கள் அதை கழுவி சமைக்க அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு சென்றனர். இதில் கலைவேந்தன், தமிழரசன், ஆண்டோ, பிராங்கிளின், மனோகரன் ஆகிய 5 ஆகிய 5 பேரும் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற 5 பேரும் திடீரென ஆற்றில் மூழ்க தொடங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கரையில் நின்ற அவர்களின் நண்பர்கள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.

ஆனால் அதற்குள் ஆற்றில் 5 பேரும் முழுமையாக மூழ்கிவிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட தேடுதலுக்கு பின் கலைவேந்தன், தமிழரசன் என்ற கிேஷார் ஆகிய 2 பேரை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.

பின்னர் திருவையாறில் இருந்து கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் ஆற்றில் வலை வீசி மாயமான 3 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

மாலை 3.15 மணியளவில் மனோகரனை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். தொடர்ந்து சகோதரர்களான ஆண்டோ, பிராங்கிளின் ஆகியோரை ஆற்றில் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் மாலை 6 மணி வரை அவர்களை மீட்க முடியவில்லை. அவா்களை தேடும் பணி இரவு 7.30 மணி வரை நீடித்தது. இதன்பிறகு இரவாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

கலெக்டர் பேட்டி

இந்தநிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன்அந்தோணி ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் உயிரிழந்தவர்களின் நண்பர்களுக்கு கலெக்டர் பிரியங்காபங்கஜம் ஆறுதல் கூறினார்.

அப்போது அவா் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் குளிக்க கூடாது என்று விளம்பரப்பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

பூண்டி மாதா பேராலயத்தில் இருந்தும் அவ்வப்போது அறிவிப்புகள் வாயிலாக கொள்ளிடம் ஆற்றில் குளிக்க கூடாது என்று கூறப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தி இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

கொள்ளிடம் ஆற்றில் முழ்கி மாயமான ஆண்டோவும், பலியான தமிழரசனும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

ஆண்டோவின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் சுகந்தி சென்னை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

குடும்ப வறுமை காரணமாக ஆண்டோ பகுதி நேர வேலை செய்துக் கொண்டே படித்து வந்துள்ளார். 'யூடியூப்' சேனலையும் நடத்தி வந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து நடித்து அந்த வீடியோக்களை இந்த யூடியூப்பில் பதிவிட்டு வந்துள்ளார்.

குடியிருப்புவாசிகள் துக்கம்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதும் ஆண்டோவின் ஆசையாக இருந்துள்ளது. ஏற்கனவே கணவரை இழந்து தற்போது 2 மகன்களையும் (ஆண்டோ, பிராங்கிளின்) சுகந்தி பராமரித்து வருகிறார்

பலியான கலைவேந்தனின் தந்தை ஆட்டோ டிரைவர் ஆவார். மனோகர் பிளஸ்-2 படித்துவிட்டு பைக் டாக்சி ஓட்டி வந்தார். பலியான தமிழரசன் அவரது வீட்டுக்கு ஒரே பிள்ளை ஆவார்.

இவர்கள் வேளாங்கண்ணி திருவிழாவை பார்ப்பதற்கு செல்லும் முன்பாக தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மாதா ஆலயத்துக்கு பெயிண்ட் அடித்து தந்துள்ளனர். இவ்வாறு அவர்களை பற்றி பல உருக்கமான தகவல்களை சென்னை கீழ்ப்பாக்கம் குடியிருப்புவாசிகள் துக்கம் தாங்காமல் கண்ணீருடன் கூறியுள்ளனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments