அறந்தாங்கி அருகே அரசு கலை கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்




அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், ஆவுடையார்கோவில் வட்ட சட்டப் பணிகள் குழுவும் இணைந்து கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை தாங்கி பேசினார். முகாமில் சிறப்பு விருந்தினராக ஆவுடையார்கோவில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி ரேவதி வட்ட சட்டப்பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில், எனக்கு சட்டம் தெரியவில்லை என்று சொல்லக்கூடாது என்பது லத்தீன் பழமொழி. எனவே சட்ட அறிவு, விழிப்புணர்வு என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. நீங்கள் அனைவரும் எப்போதும் எங்கும் கவனமாக இருக்க வேண்டும். 

குறிப்பாக பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு பகிர்வது, செல்போன் வாயிலாக கலந்துரையாடுவது என எல்லா விஷயங்களிலும் பெண்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும். வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் வழக்குகளில் மிக எளிமையாக வெற்றி காணலாம். இலவசமாகவும் சட்ட உதவியைப் பெறலாம் என்றார். அறந்தாங்கி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் லோகநாதன் சட்டக்கருத்துரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் காளிதாஸ், பேராசிரியை ராஜலட்சுமி, வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட தன்னார்வலர் பிரகதீஷ்வரி மற்றும் 150-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனித்துரை வரவேற்றார். முடிவில் அறந்தாங்கி வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments