அக்டோபர் 29-ந்தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வாய்ப்பு




மதுரை விமான நிலையம் அடுத்த மாதம் 29-ந்தேதி முதல், 24 மணி நேரமும் செயல்பட இருக்கிறது. இதன் மூலம், கூடுதல் விமானங்கள் இயக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த ஆண்டு மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விமான நிலையத்தில் போதிய மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், 24 மணி நேரமும் செயல்படாத நிலை நீடித்தது.

எனவே, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் வருகிற அக்டோபர் மாதம் 29-ந்தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு செயல்பட தொடங்கினால், வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

கூடுதல் விமான சேவை

இதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில், மதுரை விமான நிலையம் 24 நேரமும் செயல்பட உள்ளதால், இரவு நேரத்தில், தங்கள் விமானங்களை இயக்குவதற்கு அந்தந்த நிறுவனங்கள் கால அட்டவணையை தயார் செய்து அனுப்புமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் எந்தெந்த விமான நிறுவனங்கள் மதுரைக்கு விமான சேவையை பயன்படுத்த விரும்புகிறார்களோ, அதற்கு ஏற்றார்போல், அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

24 மணி நேர சேவை

24 மணி நேர சேவை வழங்க வசதியாக கூடுதலாக மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், மதுரை விமான நிலைய ஊழியர்களுக்கும் சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்படுவதால், மலேசியா, கோலாலம்பூர், சார்ஜா, குவைத் போன்ற இடங்களுக்கு புதிய விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த சேவையை சிறப்பாக அமல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments