மணமேல்குடியில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது




மணமேல்குடியில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏனாதி முதல் கட்டுமாவடி வரை சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதியாகும். கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதேபோல மணமேல்குடி அருகே கட்டுமாவடி உள்பட அதனையொட்டியுள்ள பகுதிகளில் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். கடற்கரையொட்டி மீனவ கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல மீனவ கிராமங்களில் மீன்பிடி சார்ந்த தொழில்களிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடற்பாசி வளர்ப்பு தொழிலும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஈடுபடுகின்றனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இந்த நிலையில் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், மீன்வளத்துறை மற்றும் இதர துறைகளால் கிடைக்கப்பெற வேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும், மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முன்பு நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை.

இதனால் வாரத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதத்தில் ஒரு நாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதை போல மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மீனவர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மீனவர்கள் சார்பில் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

மணமேல்குடி

இந்த நிலையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் மணமேல்குடியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. அறந்தாங்கி ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார். திருச்சியில் இருந்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டு கோாிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம்.

மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். இனி தொடர்ந்து மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். கடற்கரை பகுதியையொட்டியுள்ள மீனவர்கள் அங்கிருந்து புதுக்கோட்டை நகரப்பகுதிக்கு வர பயண நேரம் அதிகமாகும் என்பதால், அருகில் வந்து செல்லும் வகையில் மணமேல்குடியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments