இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டையில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12.98 லட்சம் வாக்காளர்கள்




இறுதி வாக்காளர் பட்டியலின் படி புதுக்கோட்டையில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12,98,907 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026- ன் இறுதி வாக்காளர் பட்டியலினை, புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருணா நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,41,276 ஆண் வாக்காளர்கள், 6,57,562 பெண் வாக்காளர்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 12,98,907 வாக்காளர்கள் 2026-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் நீக்கம்

2025-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் (19.12.2025) -இன் படி மொத்தம் 12,54,525 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 19.12.2025 முதல் 30.01.2026 வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மற்றும் தொடர் திருத்தத்தின் போது 21,604 ஆண் வாக்காளர்கள், 27,035 பெண் வாக்காளர்கள் மற்றும் 23 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 48,662 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

19.12.2025 முதல் 30.01.2026 வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மற்றும் தொடர் திருத்தத்தின் போது 1,839 ஆண் வாக்காளர்கள், 2,440 பெண் வாக்காளர்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 4,280 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,681 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு மொத்தம் 13,94,112 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12,98,112 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 95,205 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்கள்

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 881 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 966 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. 17 வயதுடைய இளம் வாக்காளர்கள் தாங்கள் 18 வயது தகுதி பெறும் நாளை அடிப்படையாக கொண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ம் நாளில் 18 வயது பூர்த்தியடையும் போது அடுத்த காலாண்டில் மனுதாரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும்.

ஜனவரி 1-ம் நாளில் 18 வயது நிறைவடைந்து சிறப்பு தீவிர திருத்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய மனுதாரர்கள் தொடர் திருத்தக் காலத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் அல்லது தகுதியான வாக்காளார்கள் http://voters.cci.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விராலிமலை, கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை (தனி) 98,028 ஆண் வாக்காளர்கள், 96,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 1,94,732 வாக்காளர்கள். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 1,10,011 ஆண் வாக்காளர்கள், 1,13,040 பெண் வாக்காளர்கள் மற்றும் 33 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 2,23,084 வாக்காளர்கள், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,09,962 ஆண் வாக்காளர்கள், 1,13,943 பெண் வாக்காளர்கள் மற்றும் 23 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 2,23,928 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆலங்குடி, அறந்தாங்கி...

திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1,07,006 ஆண் வாக்காளர்கள், 1,12,270 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 2,19,279 வாக்காளர்கள் உள்ளனர். ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 1,03,987 ஆண் வாக்காளர்கள், 1,06,309 பெண் வாக்காளர்கள் சேர்த்து மொத்தம் 2,10,296 வாக்காளர்கள் உள்ளனர்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1,12,282 ஆண் வாக்காளர்கள், 1,15,305 பெண் வாக்காளர்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 2,27,588 வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 6,41,276 ஆண் வாக்காளர்கள், 6,57,562 பெண் வாக்காளர்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 12,98,907 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமால், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), கோகுல்சிங் (இலுப்பூர்), அபிநயா (அறந்தாங்கி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவி, உதவி ஆணையர் (கலால்) திருமால், மாவட்ட வழங்கல் அலுவலர் பார்த்தசாரதி, புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன், தனி தாசில்தார் (தேர்தல்) செந்தமிழ்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments