ஆவுடையார்கோவிலில் சிறிய ஜவுளி பூங்கா பெண்களுக்கு ரூ.500 கோடி தொழில் கடன் அமைச்சர் அறிவிப்பு



ஆவுடையார் கோவிலில் சிறிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றும், பெண்களுக்கு ரூ.500 கோடியில் தொழில் கடன் வழங்கப்படும் என்று சட்டசபையில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்தார்.

அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு

சட்டசபையில் நேற்று மானியக்கோரிக்கையில் தொழிற்துறை சார்பில் மொத்தம் 22 அறிவிப்புகளை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

* கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடி, சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி திட்ட மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூட வசதிகள் உருவாக்கப்படும்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 20,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முடிவைத்தானேந்தல் பகுதியில், சுமார் 2,570 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்பூங்கா சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்படும்.

* நாமக்கல் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் லத்துவாடி பகுதியில், சுமார் 245 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

உலகளாவிய திறன் மையம்

* தமிழ்நாட்டில் அமையவுள்ள செமிகண்டக்டர் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பிரத்யேக ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை பெருமளவில் ஏற்படுத்த தமிழ்நாடு உலகளாவிய திறன் மையங்கள் வழித்தடம் மற்றும் வளர்ச்சித் திட்டம்; பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையிலான ரேடியல் சாலை, மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.

வெற்றி மகளிர் திட்டம்

* நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் “வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” மூலம் மகளிர் தொழில்முனைவோருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, தொழில்முனைவோரின் பங்களிப்பு 35 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், பிணைய சொத்து 50 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும் மற்றும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.20 சதவீதத்தில் இருந்து 9.95 சதவீதமாகவும் தளர்வு செய்யப்பட்டு, எளிய முறையில் மகளிர் தொழில்முனைவோர்களுக்கு கடன்உதவி வழங்கப்படும்.

நடப்பாண்டில், “வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்” மூலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் ரூ.500 கோடி மதிப்பிலான கடன்உதவி வழங்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதோடு, 3,500-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

உப்பளத்தொழிலாளர்கள் நிவாரணம்

* உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 23,000 தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும். இதன் மூலம் ஏற்படும் ரூ.16.78 கோடி செலவை அரசே ஏற்கும்.

* தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு ‘வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு’ என்ற வணிக பெயரில் நியாய விலைக்கடைகளிலும் (ரேஷன் கடைகள்) மற்றும் வெளிச்சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும்.

ராமேசுவரம்

உளுந்தூர்பேட்டை விமான ஓடுதளத்தை விமான பரிசோதனை மையமாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ராமநாதபுரம் மாணிக்கனேரியில் நிலம் எடுக்கப்பட்டு, ராமேசுவரம் விமான பரிசோதனை மையம் கொண்டு வருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

ஆவுடையார் கோவில்

* சிப்காட் நிறுவனம் ஜவுளி தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து ஆயத்த தொழிற்கூட வசதிகளுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா ஒன்றை புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம் திரப்பிடங்கி எனும் இடத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மாயனூரில் வெற்றி நோட்டு புத்தகம்

* தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஆண்டொன்றுக்கு 5,000 டன் உற்பத்தி திறன் கொண்ட “வெற்றி நோட்டு புத்தகங்கள்” தயாரிக்கும் தொழில் அலகு ஒன்று கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா அறிவிப்புகளை வெளியிட்டார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments