நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்: கோபாலப்பட்டிணத்தில் தெருநாய் கடித்து செல்லப் பிராணி பரிதாப பலி!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் வளர்ப்புப் பூனை ஒன்று தெருநாய்கள் கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் புகார்கள்
கோபாலப்பட்டிணம் வீதிகளில் கூட்டமாகச் சுற்றும் தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து நிலவுவதாகக் கூறி, கடந்த 10/08/2026 அன்று GPM மீடியாவில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றச் செயலரைத் தொடர்புகொண்டு தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என GPM மீடியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கடந்த 15/08/2026 அன்று நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டதுடன், தீர்மானம் நிறைவேற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சோக சம்பவம்
நிர்வாகத்தின் அலட்சியத்தால் தெருநாய்களின் பெருக்கம் தீவிரமடைந்த நிலையில், நேற்று (21/08/2026) வீட்டை விட்டு தற்செயலாக வெளியே வந்த செல்லப் பிராணியான பூனையை, தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் கூட்டமாகச் சூழ்ந்து கடித்துக் கொன்றன. இச்சம்பவம் நடந்த நேரத்தில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அவ்வழியாக வந்துகொண்டிருந்த காட்சி அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.

பொதுமக்கள் வேதனை
நாய்களின் அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரித்தும் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துவிட்டது. இன்று ஒரு உயிரினத்திற்கு நடந்த இந்தத் துயரம், நாளை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது பாதசாரிகளுக்கோ ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.


எனவே, இனியும் தாமதிக்காமல் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், கோபாலப்பட்டினம் பகுதியில் அச்சுறுத்தல் அளிக்கும் தெருநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments