சிந்திக்க சில நபிமொழிகள்...



     உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).
      ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

     ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045). 


 மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம். 
 இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.
        வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 


Post a Comment

0 Comments