வாக்குச்சாவடியை மாற்றித்தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்! கோபாலப்பட்டினம் மக்கள் அறிவிப்பு



வாக்குச்சாவடியை மாற்றித்தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று மீமிசல் அருகே கோபாலப்பட்டினம் கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள நாட்டாணி புரசக்குடி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் இந்த ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்களில் 6வது வார்டில் உள்ள 484 வாக்காளர்களில் 83 வாக்காளர்கள் மட்டும் அருகில் உள்ள ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 6வது வார்டில் உள்ள 83 வாக்காளர்களுடன் 401 வாக்காளர்களையும் சேர்த்து மொத்தம் உள்ள 484 வாக்காளர்களையும் ஆர்.புதுப்பட்டினத்தில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க மாற்றம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 6வது வார்டில் உள்ள 401 வாக்காளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் பெண்கள், முதியவர்கள். இவர்கள் அனைவரும் 3கி.மீ. தூரம் உள்ள ஆர்.புதுப்பட்டினம் சென்று வாக்களிப்பது என்பது முடியாத காரியம். எனவே, 6வது வார்டை சேர்ந்த அனைவரும் கோபாலப்பட்டினத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து கோபாலப்பட்டினம் ஜமாத் தலைவர் செய்யதுமுகமது கூறுகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் கோபாலப்பட்டினம் 6வது வார்டை சேர்ந்த அனைவரையும் ஆர்.புதுப்பட்டினம் வாக்கு சாவடியில் சேர்த்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ., ஆவுடையார்கோவில் தாசில்தார், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் வரும் உள்ளாட்சி தேர்தலை கோபாலப்பட்டினத்தில் உள்ள 3,000 வாக்காளர்களும் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என முடிவு எடுத்துள்ளோம் என்றார்.

Post a Comment