இஸ்லாமிய பார்வையில் விதி !!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு) 
யாருக்கு எது நடந்தாலும் 'இறைவன் உனக்கு எழுதி வைத்த தலைஎழுத்து என்று சொல்லுவார்கள்' அப்படியிருக்கும் போது அதன் படிதான் 
மனிதனும்
நடக்கின்றான்.குடிக்காரன் குடிக்கிறான் கெட்டவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், இதுவும் இறைவன் எழுதிய எழுத்து என்றால், ஏன் தண்டனை தர வேண்டும் இறைவன்.???
எல்லாமும் இறைவனின் விதிப்படிதானே நடக்கின்றது. பிறகு நாம் எப்படி குற்றவாளியாவோம் என்ற எண்ணம் பரவலாக எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கின்றது. இறைவன் நாடியதுதான் நடக்கும் இறைவன் நாடாமல் 
எது வொன்றும் நடக்காது என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வசனங்களை இவர்கள் தங்களின் விதி நம்பிக்கைக்கு சாதகமாக நினைத்துக் கொள்கின்றார்கள். விதியைப் பற்றியோ அல்லது குர்ஆன் வசனங்களை விளங்காமையோ தான் இத்தகைய சிந்தனைக்கு அவர்களைத் தள்ளுகின்றது.


அவர்கள் விளங்கும் விதத்தி்ல் நாமும் சில கேள்விகளைக் கேட்போம்.   
     இறைவன் விதித்தப்படிதான் எல்லாமும் நடக்கின்றது என்று கூறினால் அதே இறைவன் தான் தூதர்களை அனுப்பி, வேதங்களை வழங்கி 'தூதர் காட்டிய வழியிலும், வேதத்தின் வழியிலும் வாழுங்கள்' என்கிறான். இதுவும் இறைவனின் விதிதான். விபச்சாரம் செய்து விட்டு 'இது விதி' என்று சொல்லுபவர்கள், தவறான காரியங்களில் ஈடுபட்டு விட்டு 'இது விதி'   என்று கூறுபவர்கள் இறைவன் விதித்த 'நல்வழியில் செல்லுங்கள்' என்ற விதியை ஏன் புறக்கணிக்கிறார்கள். அதுவும் விதிதானே..
    விபச்சாரம் செய்வதற்கோ, திருடுவதற்கோ, கொலை செய்வதற்கோ, மோசடிப் போன்ற அநேக ஈனச்செயல் செய்வதற்கோ அதில் ஈடுபடுபவர்கள் புறத்திலிருந்து ஒரு முயற்சி இருக்கத்தான் செய்கின்றது. அவர்களின் சுய முயற்சி இல்லாமல் இதுவெல்லாம் நடப்பதில்லை. இதே முயற்சியை அவர்கள் நல்லக்காரியங்களில் செய்து விட்டு 'விதிப்படிதான் நடக்கின்றது' என்று சொல்லிப் பார்க்கட்டும் அப்போது விதியின் அர்த்தம் புரியும்.
     விதிவாதம் பேசுபவர்கள் தங்கள் வீட்டில் ஒரு திருட்டுப் போனால் விதிப்படி போய்விட்டது என்று பேசாமல் இருப்பதில்லை. அதை கண்டுப்பிடிக்க 
முயல்கிறார்கள், காவல் நிலையம் செல்கின்றார்கள். சொந்த பந்தஙகள் சொத்துப் போன்றவற்றை அபகரித்துக் கொள்ளும் போது விதியென்று மெளனமாக இருக்காமல் நீதிமன்றம் செல்கின்றார்கள். வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு 'விதிப்படி கல்யாணம் நடக்கும்' என்றில்லாமல் நல்லக் கணவனைத் தேடி அலைகின்றார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் அவர்கள் சிந்தித்தால் விதி என்னவென்பது அவர்களுக்கு விளங்கும்.


     எந்த ஒரு காரியம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் மீறி நடக்கின்றதோ அது இஸ்லாமியப் பார்வையில் விதி. 
மரணம் நம் கட்டுப்பாட்டையெல்லாம் கடந்துநடப்பதாகும் அது விதி. இழப்பு (உதாரணம் சுனாமி) நம் பாதுகாப்பு அரண்களை மீறி நடந்ததாகும் அது விதி. விபத்துக்களில் உயிரிழப்பது, கடும் நோய்களால் அவதிப்பட்டு மடிவது, குழந்தைப்பேறுக்காக அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகும் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போவது, பருவ மழைத் தவறி விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவது போன்ற உதாரணங்களை இங்கு சொல்லலாம். ஈராக், பாலஸ்தீனம், சோமாலி, ஆப்ரிக்காவின் அநேக நாடுகளாக இருந்தால் இதே உதாரணங்கள் அங்கு வேறு விதமாக வெளிப்படும்.
     நம் கட்டுப்பாட்டுக்குள் ஒரு தவறு நடந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு. (உதாரணம் தற்கொலை) இதற்கு இறைவன் தண்டனை அளிப்பான். வட்டி - சூது -திருட்டு - அபகரிப்பு போன்ற பாவங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்து நடப்பதாகும். அதாவது அதற்கு நாமே முயற்சிக்கிறோம் என்பதால் அதற்கு தண்டனையுண்டு. ஏனெனில் இவ்வாறு நடந்துக் கொள்ளக் கூடாது என்று இறைவன் தான் விதித்துள்ளான்.

இவற்றைப் புரிந்துக் கொண்டால் விதி என்றால் என்னவென்று விளங்கும். 
சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். 'நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்' என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப் பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற் கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர். மேலும் அவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் 'விதி' இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது. இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா? தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாகஇ செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக் காதது முரண்பாடாகவும் உள்ளது.

     எனவே, விதியைப் பற்றி சர்ச்சை களைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக் கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

விதியை விளக்கும் இறைவசனம்.
'உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் ,அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ' (திருக்குர்ஆன் 57:23)

Post a Comment

0 Comments