ஒரு மனிதன் மரணித்த பிறகும் அவருக்கு நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் 'ஸதக்கத்துன் ஜாரியா' எனும் நிலையான தர்மத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசல் அருகே உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் அமைந்துள்ள ரஹ்மானியா பெண்கள் மதரஸா. இன்று இக்கட்டிடம் 'நூருல் அய்ன்' என்ற பெயரில் புதுப்பொலிவு பெற்று 57-வது ஆண்டில் தனது கல்விப் பணியைத் தொடர்கிறது.
தியாகத்தால் உருவான அஸ்திவாரம் (1970)
1970-களுக்கு முன்னதாக கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பெண் குழந்தைகள் குர்ஆன் கற்கவோ அல்லது பெண்கள் தொழுவதற்கோ பிரத்யேகமான இடவசதி இல்லை. வீடுகளிலும் சின்னப்பள்ளி தர்காவிலுமே சென்று தொழுகைகளை நிறைவேற்றி மற்றும் கல்வி பயின்றும் வந்தனர். இந்தத் தேவையினை உணர்ந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம்.ஹாஜி.மு.செ.மு.முஹம்மது ஹனீப் ஆலிம் அவர்கள், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைச் செய்து சென்றிருக்கிறார்.
தனது சொந்த இடத்திலேயே, தனது சொந்தச் செலவில் மதரஸாவைக் கட்டியெழுப்பினார். அதற்காக ஏற்பட்ட கடனை அடைக்க தான் வசித்து வந்த சொந்த வீட்டையே விற்று, 08.03.1970 அன்று 'ரஹ்மானியா பெண்கள் மதரஸா' என்ற பெயரில் அதனை வக்ஃபு செய்தார்கள். அன்று முதல் இன்று வரை இப்பகுதிப் பெண்களின் ஆன்மீகப் புகலிடமாக இது திகழ்ந்து வருகிறது.
விரிவாக்கப் பணிகளும் ஜமாத்தாரின் பங்களிப்பும்
மதரஸாவின் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ஊர் ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து அதன் பரப்பளவை விரிவுபடுத்தினர்,
முதல் விரிவாக்கம்
(விளக்கெண்ணை பீஸ் எனப்படுகிற) மர்ஹூம் ஹபீப் முஹம்மது அவர்களிடமிருந்து தென்பகுதி இடம் வாங்கப்பட்டது.
இரண்டாவது விரிவாக்கம்
அதனைத் தொடர்ந்து இருந்த (சுரக்கா அப்பா என்கிற சாகுல் ஹமீது அவர்களின் பேரன்) ரபீக் என்பவரது பாகமும் வாங்கப்பட்டு மதரஸா விரிவுபடுத்தப்பட்டது.
நவீன மயமாக மாறிய 'நூருல் அய்ன்' (2019 - 2022)
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டு கட்டிடமாக இருந்த பழைய கட்டிடம் பழுதடைந்த நிலையில், 04.12.2019 அன்று புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மு.மு.ஜகுபர் சாதிக் அவர்கள் தனது சொந்தப் பொருளாதாரத்தில் மிகப்பிரம்மாண்டமான புதிய கட்டிடத்தை நிர்மாணித்து ஊருக்கு அர்ப்பணித்தார். இக்கட்டிடம் 12.05.2022 அன்று 'நூருல் அய்ன்' என்ற பெயரில் திறப்பு விழா கண்டு, தற்போது 08.03.2026 முதல் 56-வது ஆண்டில் நடைபோடுகிறது.
வரலாற்றுப் பதிவுகளின் அவசியம் மற்றும் ஆதங்கம்
புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் முகப்பில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் பழைய பெயரான 'ரஹ்மானியா பெண்கள் மதரஸா' மற்றும் அதன் நிறுவனரின் தியாக வரலாறு விடுபட்டுள்ளது என்பது சமூக ஆர்வலர்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்னிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தைச் செலவிடுவதற்கும், தனது அத்தியாவசியத் தேவையான வீட்டையே விற்று பொதுநலனுக்காக அர்ப்பணிப்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ஹனீப் ஆலிம் அவர்களின் அந்தப் பெரும் தியாகமே இந்த மதரஸாவின் ஆணிவேர். அத்தகைய வரலாறுகள் கல்வெட்டுகளில் பதியப்படாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளில் வரும் தலைமுறைக்கு இந்தத் தியாகத்தின் தடம் தெரியாமல் போய்விடும்," என சமூக ஆர்வலர்ககள் மற்றும் ஊர் பெரியவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஜமாத் கூட்டமும் முக்கிய முடிவுகளும்
கடந்த பிப்ரவரி 06, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஊர் ஜமாத் ஆலோசனைக் கூட்டத்தில், மதரஸாவின் அடையாளத்தை சிதைக்காமல் இருக்கவும், முன்னோர்களின் தியாகத்தை மதிக்கும் விதமாகவும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி:
நிறுவனத்தின் பெயர் "ரஹ்மானியா நூருல் அய்ன் பெண்கள் மதரஸா" என்றே அழைக்கப்படும்.
இதற்காக முறையான கல்வெட்டுகள் மதரஸா வளாகத்தில் அமைக்கப்படும்.
மாணவிகளுக்கு வழங்கப்படும் பட்டங்கள் (சனதுகள்) "ரஹ்மானியா" என்ற பெயரிலேயே வழங்கப்பட வேண்டும்.
இந்த முடிவுகள் ஊர்ப் பதிவுப் புத்தகத்திலும் (Register) உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பட்டமளிப்பு விழா உணர்த்தும் பாடம்
சமீபத்தில் பிப்ரவரி 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவும், அதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களும் இந்தப் பெயர் மாற்ற விவகாரத்தில் நடுநிலையாளர்களின் மனநிலையைத் தெளிவாகப் பிரதிபலித்துள்ளன. "பெயர் மாற்றம் என்பது வெறும் அடையாள மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் வரலாற்றைத் துண்டிக்கும் செயலாக மாறிவிடக்கூடாது" என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
நிர்வாகத்திற்குத் தொலைநோக்குப் பார்வையாளர்களின் வேண்டுகோள்
ஜமாத் எடுத்த முடிவுகள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பெயர்ப்பலகைகள் திருத்தியமைக்கப்பட்டு, பட்டங்கள் ரஹ்மானியா என்ற பெயரில் வழங்கப்பட்டால் மட்டுமே இது நிரந்தரத் தீர்வாக அமையும். வெறும் ஆலோசனைகள் மட்டும் மக்களின் கொந்தளிப்பான மனநிலையைத் தணிக்காது.
ஒற்றுமை ஒன்றே இலக்கு
இந்த விவகாரத்திற்காகக் காவல் நிலையத்தையோ அல்லது நீதிமன்றத்தையோ நாடுவது பொருளாதார விரயத்தையும், ஊர் ஒற்றுமையில் விரிசலையும் ஏற்படுத்தும். "செல்வமும் அதிகாரமும் யாருடைய கையிலும் நிரந்தரமல்ல கடந்த 50 ஆண்டுக்கால ஊர் நிர்வாகச் சுழற்சியும் முன்னால் கொடிகட்டிப்பறந்த பல செல்வந்தர்களின் இன்றைய சந்ததிகளின் பொருளாதார நிலையுமே இதற்குச் சாட்சி" என்பதை எந்த நிர்வாகிகளும் புரிந்து கொள்வார்கள்.
இளைய தலைமுறைக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழவும், முன்னோர்களின் பொதுநலத் திட்டங்கள் தடையின்றித் தொடரவும், நிர்வாகிகள் முதிர்ச்சியுடன் செயல்பட்டு ஊரின் ஒற்றுமையைப் பாதுகாக்க முயல்வார்கள் என்பதே நடுநிலையாளர்களின் ஒட்டுமொத்தப் பிரார்த்தனையாக உள்ளது.
இந்த பதிவை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்வதில் GPM மீடியா பெருமை கொள்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக GPM மீடியாவில் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் வரலாறை தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மறதி என்பது மனித இயல்பு; தொடர்ந்து நினைவுபடுத்துவதே GPM மீடியாவின் கடமை!
GPM மீடியாவின் கடந்த ஆறு ஆண்டு காலச் செய்தித் தொகுப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் வெளியான செய்திகளைத் தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் (Link) கிளிக் செய்யவும்.
2020-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பு
2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பு
2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பு
2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பு
2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பு
2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பு
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.