திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் ஸ்ரீலங்கன் விமானம் இறக்கை உரசியதாக வதந்தியால் பரபரப்பு



திருச்சி, நவ.30: திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஸ்ரீலங்கன் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் இறக்கைபகுதி உரசியதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பல்வேறு விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து செல்கின்றனர். இதில்  கொழும்பில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் விமானம் காலை 9.10 மணிக்கு வந்து பின்னர் மீண்டும் பயணிகளுடன் காலை 10.10மணிக்கு புறப்பட்டு கொழும்பு செல்கிறது. 


இந்நிலையில் இந்த நிறுவனத்தில் விமான போக்குவரத்து குறைவாக இருப்பதை அடுத்து காலை வந்து உடனே செல்லும் விமானம் கடந்த 2 மாதமாக மாலை 3.40 மணிக்கு செல்கிறது.  திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வந்ததால் வானிலை மோசமாக இருந்தது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமானம் 135 பயணிகளுடன் நேற்று காலை வழக்கம்போல் புறப்பட்டு திருச்சி வந்தது. அப்போது விமானம் தரையிறங்க முடியாத அளவிற்கு வானிலை மோசமாக இருந்ததால் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஸ்ரீலங்கன் விமான பைலட்டுக்கு விமானம் தரையிறங்க முடியாத அளவிற்கு உள்ளதாக தகவல் அளித்து விமானத்தை மீண்டும் கொழும்பு சென்று தரையிறக்க உத்தரவிடப்பட்டது. 

ஆனாலும் ஸ்ரீ லங்கன் விமானம் திருச்சியை நெருங்கிவிட்டதால் இங்கு தரையிறங்காமல் ஒரு வட்டமடித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி சென்றது. பின்னர், வானிலை சீரானவுடன் கொழும்புவில் இருந்து புறப்பட்டு 11.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் மீண்டும் வழக்கமாக மாலை 3.40 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த விமானத்தில் வந்த பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.  இதற்கிடையில் ஸ்ரீலங்கன் விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமான பைலட்டுக்கு ஓடு பாதை தெரியாததால் விமானத்தின் இறக்கை பகுதி தரையில் உரசியதாகவும் மீண்டும் விமானி சாதுர்யமாக விமானத்தை மேலெழுப்பி செலுத்தியாகவும் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து விமான நிலைய வட்டார அதிகாரிகள் கூறுகையில், இலங்கை விமானம் புறப்பட்டு திருச்சி வருவதற்குள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டதால் அந்த விமானம் மீண்டும் கொழும்பு சென்றது. வானிலை சீரானவுடன் புறப்பட்டு திருச்சி வந்தது. இதில் விமானத்தின் இறக்கை பகுதி தரையில் உரசியதாக கூறுவது முற்றிலும் தவறானது. அவ்வாறு உரசி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றனர். 

Source: Dinakaran

Post a Comment