1 லட்சம் ரூபாய் நாணயம்? வதந்தியை நம்பாதீங்க



ஒரு லட்சம் ரூபாய் நாணயம், 125 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டதாக, சமூக வலைதளங்களில், படத்துடன் செய்திகள் வலம் வருகின்றன; இவை போலியானவை. யாரும் நம்ப வேண்டாம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

  புதிதாக, 20, 100, 125, 200 ரூபாய் மற்றும் 1 லட்சம் ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாக கூறி, அதன் புகைப்படங்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இதில், பிரதமர் மோடி, 125 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. 

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் வலம் வரும் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை. இது போன்ற நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
மேலும், 350 ரூபாய், 5,000 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக, அதன் புகைப்படங்களும் பரவுகின்றன. இவற்றை, பொது மக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.



ஜூன் 13, 2015  19:01  தினமலர் செய்தி:

ரூ.1,000 , ரூ.1 லட்சம் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாணயங்கள் தயாரிப்பது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரூ. 150, ரூ.1,000 நாணயங்கள், நாணய பிரியர்களுக்காக மட்டுமே மத்திய அரசு அச்சிட்டு வழங்குகிறது. இந்த நாணயங்களை பொக்கிஷமாக மட்டுமே வைக்க முடியும். சந்தையில் உபயோகப்படுத்த முடியாது.

இந்த நாணயங்களை பெறுவதற்கு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளன. முன்பதிவு அடிப்படையில் மட்டுமே இந்த நாணயங்களை மத்திய அரசு வழங்கும். வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என கூறினார்.

Post a Comment