மாதம் ரூ.153-க்கு 100 சேனல் டிராய் அறிவிப்பு! ஜன.31க்குள் முடிவெடுங்கள் ...!



விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இப்போது கேபிள் அல்லது டிடிஎச் மூலம் குறிப்பிட்ட சேனல்கள் தொகுப்பாக வழங்கப்படுகின்றன. அதில் நமக்கு தேவைப்படாத சில சேனல்கள் இருந்தாலும் அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்துகிறோம். 

இந்நிலையில் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே பணம் செலுத்தி பார்க்கும் முறை அமல்படுத்தப்படும் என டிராய் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதன்படி, தங்களுக்கு விருப்பமான சேனல்கள் பட்டியலை கேபிள் டிவி சேவை அல்லது டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனத்திடம் வரும் 31-ம் தேதிக்குள் வழங்குமாறு அறிவித்திருந்தது.

இந்நிலையில், குறைந்தபட்ச கட்டணம் உள்ளிட்ட சில விவரங் களை டிராய் அறிவித்துள்ளது. இதன்படி, விரும்பிய சேனல்களை பார்க்கும் திட்டம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி அமலாகிறது. 

ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்சம் 100 சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ரூ.153.40 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் செலுத்த வேண்டும். 

இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ, கட்டண சேனல்களாகவோ இருக்கலாம். அதேநேரம், இந்த குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் எச்.டி. தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது.

மேலும் எச்.டி. சேனல்கள் அல்லது கூடுதல் சேனல்கள் தேவைப்படுபவர்கள் அதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தி பார்க்கலாம். இதுபோல ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.19-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என டிராய் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

Post a Comment