மாநில முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜன. 30,31 மற்றும் பிப். 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜன. 30 ஆம் தேதி ஆண்கள் கபாடி மற்றும் கையுந்துப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பூப்பந்துப் போட்டிகள் குலபதி பாலையா பள்ளியிலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மேசைப்பந்துப் போட்டிகள் ஆபீஸர்ஸ் கிளப்பிலும் நடைபெறும். ஜன. 31ஆம் தேதி மகளிர் கையுந்துப்பந்துப் போட்டிகள் மற்றும் மகளிர் கபாடிப் போட்டிகள்,ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல், ஜிம்னாஸ்டிக் ஆகியன மாவட்ட விளையாட்டரங்கிலும் நடைபெறும்.
பிப். 1-ல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டிகள், பளுதூக்கும் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் காலை 8 மணிக்குத் தொடங்கும். பங்கேற்க விரும்புவோர் அதே வளாகத்தில் காலை 7 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பங்கேற்க விரும்புவோருக்கு 2018 டிச. 31ஆம் தேதி 21 வயது நிரம்பியிருக்கக் கூடாது. வயதுக்கான சான்றிதழை அவசியம் எடுத்து வர வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 1000, இரண்டாம் பரிசாக ரூ. 750, மூன்றாம் பரிசாக ரூ. 500 வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநிலப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாவட்டப் போட்டிகளில் பங்கேற்போருக்கு பயணப்படி உள்ளிட்ட படிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. ஆனால், மாநிலப் போட்டிகளுக்குச் செல்வோருக்கு படிகள் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை 04322 222187, 7401703498 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.