கின்னஸ் சாதனை படைத்தது! விராலிமலை ஜல்லிக்கட்டு!



விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1353 காளைகள், 424 காளையர் என பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணியளவில் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார்.

வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விட, அவற்றை அடக்க ஆக்ரோஷமாக பாய்ந்தனர் மாடுபிடி வீரர்கள். பெரும்பாலான காளைகள் களத்தில் யாருக்கும் பிடிக்கொடுக்காமல் நின்று விளையாடியது காண்போரை கவர்ந்தது. கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டிருந்தது, விராலிமலை ஜல்லிக்கட்டின் கூடுதல் சிறப்பு.


மாலை 6 மணி வரை காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் மல்லுக்கட்டினர். இறுதியில் 21 காளைகளை பிடித்த திருச்சி கொட்டப்பட்டு முருகானந்தம் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 16 காளைகளை அடக்கிய காட்டூர் கார்த்தி 2ஆம் இடமும், 14 காளைகளை அடக்கிய செங்குறிச்சி ஆனந்த் 3ஆம் இடமும் பிடித்தனர்.


இதுபோல களத்தில் 50 வினாடிகள் நின்று வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய ராப்பூசல் முருகானந்தம் என்பவரது காளை முதலிடம் பிடித்து தனது உரிமையாளருக்கு காரை பெற்றுத்தந்தது. தங்கபுரம்பட்டி விக்னேஷ் என்பவரின் காளைக்கு புல்லட்டும், 3, 4 மற்றும் 5ஆம் இடம் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட்டன.


ஒரே நாளில் 1353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை உலக சாதனையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது. கின்னல் சாதனை ஆங்கீகாரக்குழு நிர்வாகிகள் மெலடியோ, மார்க் ஆகியோர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை வழங்கினர்.

இது மட்டுமின்றி விராலிமலை ஜல்லிக்கட்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பிடித்துள்ளது. மொத்தத்தில் விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழர்களின் வீரத்தை உலகிற்கே மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது. மேலும் விராலிமலை ஜல்லிக்கட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதியதலைமுறை

Post a Comment