5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
