கும்பகோணத்தில் தகராறை தடுக்க முயன்றபோது கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அரபி பாடசாலை ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு



கும்பகோணத்தில் ஆசிரியர் உள்ளிட்ட இருவரை  வெட்டிய 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (55). இவர் பெசன்ட் சாலையிலுள்ள திரையரங்கில் வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவு  மடத்துத் தெருவில் வந்து கொண்டிருந்தபோது,  கோவிந்தராஜனின் சைக்கிள் பழுதானது. 

அதை சரிசெய்து கொண்டிருந்தபோது,  அங்கு வந்த கல்யாணராமன் தெருவை சேர்ந்த ராமைய்யன் மகன் மண்டைசெல்வம் (57),  அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் தினேஷ் (24) ஆகிய இருவரும் கோவிந்தராஜுடம் பணம் கேட்டு மிரட்டி,  அவரின் சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுத்தனராம்.

 அப்போது ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் சேர்ந்து கோவிந்தராஜனின் கையில் கத்தியால் வெட்டினராம். அப்போது,  அந்த வழியாக மேலக்காவிரி பள்ளிவாசலிலுள்ள அரபி பாடசாலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும்,  புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்அமீது மகன் ஜாபர்சாதிக் (25) தகராறை தடுக்க முயன்றாராம்.  இதனால் ஆத்திரமடைந்த மண்டைசெல்வம் மற்றும் தினேஷ் ஆகியோர்,  அரிவாளால்  ஜாபர்சாதிக் தலையில் வெட்டினர். வெட்டுப்பட்ட கோவிந்தராஜனும்,  ஜாபர்சாதிக்கும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து,  மண்டை செல்வம் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நன்றி: தினமணி

Post a Comment