புதுக்கோட்டையில் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு



புதுக்கோட்டையில் சிறைவாசிகளால் நடத்தப்படும் பிரீடம் எனப்படும் பெட்ரோல் வழங்கும் நிலையம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
சிறைவாசிகளின் வாழ்வியல் நடத்தை மாற்றத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் சிறைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 11 இடங்களில் பெட்ரோல் வழங்கும் நிலையங்களை தொடங்க மாநில அரசு முடிவு செய்தது. நிலத்தை சிறைத்துறை வழங்கும் நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, கோவை, வேலூர் மற்றும் புழல் ஆகிய 5 இடங்களில் முதல் கட்டமாக பெட்ரோல் வழங்கும் நிலையங்களைத் தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் புழலைத் தவிர மற்ற 4 இடங்களிலும் விற்பனை நிலையங்கள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
இதில் புதுக்கோட்டை சிறை வளாகத்தில் பிஎல்ஏ ரவுண்டானா முன்பு அமைக்கப்பட்ட பிரீடம் பெட்ரோல் வழங்கும் நிலையத்தை திருச்சி சரகச் சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திருச்சி மண்டலத் தலைமைத் துணைப் பொது மேலாளர் பாபு நரேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட 19 சிறைவாசிகளுடன், மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறைத்துறை அலுவலர்கள் 4 பேர் இங்கு பணியில் இருப்பர்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெட்ரோல் வழங்கப்படாது, மூடியிருக்கும். பகல் நேரத்தில் இரு ஷிப்டுகளில் பணி வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தினமும் ரூ.200 ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை பெட்ரோல் வழங்கும் நிலையத்துக்கான இடம் அரசு முறைப்படி சிறைத்துறையிடமிருந்து பெறப்பட்டது. கட்டுமானப் பணிகள், கருவிகள் உள்ளிட்ட செலவுகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ. 1.90 கோடி செலவிட்டுள்ளது.

Post a Comment