வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை.!



வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள நிலையான கண்காணிப்பு குழுக்கள், பறக்கும்படை மற்றும் தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழுவினர்களுக்கான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் வகையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்யும். இவ்வாறு பதிவு செய்யப்படும் வீடியோ பதிவுகளை தினமும் பார்வையிட்டு செலவின விபரத்தை குறிக்கும் குழுவிற்கு தவறாமல் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நிலையான கண்காணிப்பு குழுவினர் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்களாக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கிடவும், இக்குழுவினர் சாலைகளில் தீவிர வாகன தணிக்கையை ஈடுபடுவதுடன் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பறக்கும் படையினர் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்களாக அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான அனைத்து புகார்களையும் இக்குழு விசாரணை செய்யும். இதேபோல வாக்காளர்களுக்கு ஏதேனும் பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுக்க யாரேனும் முயற்சித்தால் அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை இக்குழு மேற்கொள்ளும். இதுபோல பல்வேறு நடவடிக்கைகள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments