இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக நவாஸ்கனி அறிவிப்பு!



இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக நவாஸ்கனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, நவாஸ்கனியை வேட்பாளராக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் இன்று அறிவித்தார். மத்திய, மாநில அரசுகள் மீதான மக்களின் அதிருப்தி, தனக்கு வாக்குகளாக மாறும் என நாவாஸ்கனி நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் முடிவடைந்த பின் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிமுகப்படுத்தினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில கெளரவ ஆலோசகராகவும், எஸ்.டி கூரியர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராகவும் உள்ள நவாஸ்கனி இராமநாதபுரம் குருவாடியைச் சேர்ந்தவராவார்.1979 இல் பிறந்தவர் நவாஸ் கனி. 1967 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐம்பது ஆண்டுகள் கழித்து ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுகிறது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ்கனி, தங்கள் கட்சி சின்னமான ஏணிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்புகள் தனக்கான வாக்காக மாறும் என்றும் கூறினார். இராமநாதபுரம் தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் நவாஸ்கனி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments