புதுக்கோட்டை தொகுதியை மீட்க களம் இறங்கிய ‘நோட்டா’ குழு



புதுக்கோட்டை "தயவுசெய்து நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க.. சார்... நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க" என்று ஒரு பெரியவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருந்தது ஆச்சரியத்தை தந்தது. 

5 ஆயிரம் 10 ஆயிரம் என கரெக்ட் செய்து ஓட்டுக்களை வாங்க ஒவ்வொரு கட்சியினரும் படாதபாடுபட்டு வருகிறார்கள். அதிலும் ஒரே ஒரு ஓட்டு என்றால் அது வெற்றி தோல்வியை அது நிர்ணயிக்கும் அளவுக்கு வலிமை பொருந்தியது. 

ஆனால் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்று தெரிந்தும், நோட்டாவிற்கு ஓட்டு போட சொல்லி கேட்கும் அந்த குரலை கேட்டதும் ஆச்சரியமாக போய்விட்டது. மேலும் போகிற, வருகிறவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரிடம் சென்று ஒரு நோட்டீஸை நீட்டியபடியே இப்படி சொல்லி கொண்டிருந்ந்தார்.


கேள்வி: வணக்கம் ஐயா.. உங்கள் பெயர் என்ன? ஓட்டு போட வேண்டாம்னு சொல்றது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது இல்லையா? 

பதில்: என் பெயர் வைர.ந. தினகரன். அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப்பேரவை நிறுவனர். நான் யாரையும் ஓட்டு போட வேண்டாம்னு சொல்லலையே.. அது தவறுன்னு தெரியும். அதனாலதான் நோட்டாவுக்கு போடும்படி சொல்லிட்டு வர்றேன். நேற்று வந்த இந்த "சின்னப் பையனிடமிருந்து" இதை கட்சிகள் காப்பியடிக்கலாமே... தவறில்லையே! 

கேள்வி: உங்கள் கோரிக்கைதான் என்ன? நோட்டாவுக்கு வாக்களிக்கும்படி இதென்ன புது வேண்டுகோள்? 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கு. ஆனாலும் அரசியல் சுயநலத்தால், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியோடும், விராலிமலை சட்டமன்ற தொகுதியை கரூர் பாராளுமன்ற தொகுதியோடும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகளை சிவகங்கை பாராளுமன்ற தொகுதியோடும் இணைத்து 4 பாராளுமன்ற தொகுதிகளாக பிரித்துள்ளனர். இதனால் எங்கள் மாவட்டம், தனக்கென்று தனி பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. அதனால்தான் நோட்டாவிற்கு வாக்கு கேட்கிறேன். 

கேள்வி: இதுக்கு முந்தைய தேர்தலை எப்படி எதிர்கொண்டீர்கள்? 

அப்பவும் இப்படித்தான். கடந்த 2009 தேர்தலில் இந்த எதிர்ப்பு தெரிவிக்க 49ஓவிற்கு 13,600 வாக்குகளையும், 2014 தேர்தலில் நோட்டாவிற்கு 50,932 வாக்குகளையும் பதிவு செய்தோம். அரை லட்சம் ஓட்டுக்கள் நோட்டாவிற்கு கிடைத்தது. ஆனால் அதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அதனால் பாராளுமன்ற தொகுதி மட்டுமில்லாமல், இன்று எங்கள் மாவட்ட அந்தஸ்து பறிபோகும் நிலையில் உள்ளது ஆதங்கமாக இருக்கிறது. 

கேள்வி: இப்படி நோட்டாவிற்கு போடுவதால் என்ன நிலைமை மாறும் என எதிர்பார்க்கிறீர்கள்? 

முதலில் தொகுதியை மீட்டெடுக்கவேண்டும். எங்கள் மாவட்ட அந்தஸ்து பறிபோகாமல் இருக்க வேண்டும். அதனால் எதிர்ப்பை நோட்டாவுக்கு போட்டு பதிவு செய்கிறோம். இந்த நோட்டாவிற்கு விழும் வாக்குகளை பொறுத்தே தேர்தல் ஆணையத்தின் முடிவும் இருக்கும் என்பதால்தான் நோட்டாவிற்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறோம். மாவட்டத்தில் மொத்தம் 13,00,000 வாக்குகள் உள்ளன. இதில் பெரும்பான்மை வாக்குகள் நோட்டாவில் விழ செய்வது எங்கள் கடமை என்று எல்லோரையும் கேட்டு கொண்டு வருகிறேன். போன முறை 50 ஆயிரத்துக்கும் மேல் எதிர்ப்பு என்றால் இந்த முறை எப்படியும் லட்சத்தை தாண்டும் என நினைக்கிறோம். சுருக்கமாக சொல்லப்போனால் உறவுகளைவிட உரிமை முக்கியம், கட்சிகளைவிட உரிமை முக்கியம். இதுதான் என் நோக்கம்" என்றார். 

கேள்வி: இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுக்கு எதிர்ப்பு கிளம்பவில்லையா? இல்லாமல் இருக்குமா? 

எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். ஓட்டுக்கள் பிரிவதால் அதிர்ந்து போகிறார்கள். இதனால் அனைத்து கட்சியினரும் எங்களை அணுகி சமாதானம் பேசி வருகிறார்கள். ஆனால் நாங்கள் யாருக்குமே பிடி கொடுக்க மாட்டோம். எங்கள் இலக்கு ஒரு லட்சத்துக்கும் மேலான நோட்டா வாக்குகள்தான்" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்... 

Post a Comment

0 Comments