கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை... ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்



தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் ஏழை பெற்றோரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சேர்க்கை பெற பெற்றோர் வரும் ஏப். 22-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கிராமம், நகரப் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தில் முழுமையாகப் பயனடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒவ்வொரு தனியார் பள்ளியும் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கைக்கான இலக்கை ஏப்.2-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்து அது குறித்து மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.  இதைத் தொடர்ந்து 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை பள்ளியின் தகவல் பலகையில் ஏப்.10-ஆம் தேதி கண்டிப்பாக வெளியிட வேண்டும்.  பின்னர் இணைய வழியாக விண்ணப்பிக்கத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எச்சரிக்கை:  இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிமுறைகளை பெயரளவுக்கு மட்டுமே கடைப்பிடிக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோன்று இந்தத் திட்டத்தில் பெற்றோரை அலைக்கழிக்கும் தனியார் பள்ளிகள் மீது, புகாரின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments