வெளியூர் வாக்காளர்களுக்காக சென்னையிலிருந்து 400 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்



தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. 39 பாராளுமன்ற தொகுதிகளுடன் 18 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

21 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மேலும் ஓட்டுப்பதிவு நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு கட்டாயம் ஓட்டுப்பதிவு செய்ய அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊரில் தான் ஓட்டுரிமை உள்ளது.

இதனால் பொதுமக்கள் வசதிக்காக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்களுக்கு ஓட்டுரிமை சொந்த ஊர்களில் இருக்கும். அவர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய தேர்தலின்போது 400 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

மக்களின் தேவைக்கேற்ப கோயம்பேடு, பெருங்களத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments