மீன்கள் இனப்பெருக்க காலம் - இன்று முதல் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் கடலுக்கு செல்ல தடை



தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும்.

மீன்கள் இனப் பெருக்கம் செய்யக்கூடிய நாளாக கணக்கிடும் இந்த மாதங்களில் தமிழகத்தில் அனைத்து கடலோர மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க 61 நாட்கள் தடைவிதிக்கப்படும். அதேபோன்று இந்த ஆண்டு தமிழக விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுமார் 800 விசைப்படகு மீனவர்கள் இன்று 15/04/2019 (திங்கட் கிழமை) முதல் 14/06/2019 வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்.

இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகினை கரையில் ஏற்றி, சிறு, சிறு பழுதுகளை சரி செய்வார்கள்.

இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள். தங்கள் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்ப்பார்கள். தடை காலம் தொடங்குவதால் மீனவர்கள் வருமானம் கிடைக்காமல் அவதிப்படுவார்கள்.

விசைப்படகுகள் மீன்பிடி தளத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தடைகாலம் என்பதால் மீன்கள் குறைந்த அளவே கிடைக்கும். இதனால் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகமாக காணப்படும்.

Post a Comment

0 Comments