நடிகரும் ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்



ராமநாதபுரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ஜே.கே. ரித்தீஷ் தற்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார். 13/04/2019 சனிக்கிழமை இன்று வீட்டிலிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார்.

1973ல் இலங்கையின் கண்டியில் பிறந்த ரித்தீஷின் இயற்பெயர் சிவக்குமார். 70களின் பிற்பகுதியில் ராமநாதபுரத்திற்குக் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்த ரித்தீஷ், சினிமாவின் மீது ஆர்வத்தில் 2007ஆம் ஆண்டில் கானல் நீர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. ஆகிய படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ரித்தீஷ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.கவின் சத்தியமூர்த்தியைவிட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் நிலம் வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஆனால், 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜெயலலிதாவைச் சந்தித்த ரித்தீஷ். அவர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.

அவருக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும் ஆரிக் என்ற மகனும் உள்ளனர்.

Post a Comment

0 Comments