கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் வெளியே அனுப்ப வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்



பருவ மாற்றத்தின் காரணமாக கோடை காலத்தில் வெயிலின் அதிகபட்ச தாக்கத்தினால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகளவில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிப்பாக கோடை வெயில் நேரங்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியம் இல்லாத சூழ்நிலையில் சூரிய வெப்பத்தில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.

டீ, காபி, மது மற்றும் கார்பனேட் மென்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க நண்பகல் வேளைகளில் வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் இல்லத்தரசிகள் சமையல் பணிகளை பெரும்பாலும் நண்பகலில் செய்வதை தவிர்க்க வேண்டும். சமையலரை காற்றோட்டம் உள்ளதாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் பானங்களான எலுமிச்சைச்சாறு, மோர் முதலியவற்றை தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

உடல் பரிசோதனை

இரவில் காற்றோட்டம் உள்ள அறைகளில் படுத்து உறங்குதல், மண்பானைகளில் குடிநீர் வைத்து பயன்படுத்துதல் வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் சோர்வாக இருந்தால் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை பொதுமக்களிடம் எடுத்து செல்ல தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கோடை காலங்களில் கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை பாதுகாப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் ஊரக சுகாதார மையங்கள் ஆகியவைகளின் வெப்ப கால நோய்தடுப்பு குறித்த விளம்பரங்கள் வைப்பதுடன் உள்நோயாளிகளுக்கான காற்றோட்டமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் பொழுதுபோக்கு பூங்காக்களில் மாலை நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போதிய அளவு குடிநீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கோடை காலத்தில் வெயில் பாதிப்புகள் குறித்த சந்தேகங்கள் உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக 104 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது 04322-222207 என்ற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மைய அவசர கால கட்டுப்பாட்டு அறையினையோ 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வசதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments