செந்தலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து !! வீடுகள் எரிந்து நாசம் !!



கட்டுமாவடி அருகே 09/06/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. கட்டுமாவடி அருகேயுள்ளது  செந்தலைப்பட்டிணம் கடலோரக் கிராமம்.
ஞாயிற்றுக்கிழமை காலை  இங்குள்ள அ. சாகுல்ஹமீது (28) என்பவரின் குடிசை வீட்டில்  திடீரென தீப்பற்றியது. கடல் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அருகிலுள்ள அவரது சகோதரர் ராவுத்தர் (30) ஓட்டு வீட்டுக்கும் பரவியது. இதில் அவரது வீட்டில் இருந்த சிலிண்டர்  பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதிலிருந்து  கிளம்பிய தீப்பொறி பட்டு கபூர் (26) என்பவரின் குடிசை வீடும், பக்கத்தில் உள்ள சிக்கந்தர் என்பவரின் குடிசை வீடும் தீப்பற்றின.












அருகிலிருந்த இளைஞர்கள், ஜமாஅத்தார்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தகவலறிந்த வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சி. கோவிந்தராஜன் மற்றும் வீரர்கள் தீயணைத்தனர். இந்த விபத்தில், 15 பவுன் நகை, ரொக்கப் பணம் ரூ. 1 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மாணவர்களின் பாடப்புத்தகங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், உடைகள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின. வீடுகளை இழந்தோர் அருகிலுள்ள பள்ளிக் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விஏஓ, மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Post a Comment

0 Comments